"போரை வழிநடத்தி கொலை செய்தவரே ராஜபக்‌ஷேதான்!" - இலங்கை முன்னாள் எம்.பி. | war crime row ;Rajapaksa version not acceptable says -Tamil Eelam supporters

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (08/02/2019)

கடைசி தொடர்பு:19:07 (08/02/2019)

"போரை வழிநடத்தி கொலை செய்தவரே ராஜபக்‌ஷேதான்!" - இலங்கை முன்னாள் எம்.பி.

எப்போதும் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யும் மனநிலையில் ராஜபக்‌ஷே இல்லை. அதனால் போர்க் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு இறுதிக்கட்டப் போரில் 70,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இப்படி, சர்வேதேச சமூகத்தையும் அதிரவைத்த இலங்கை ராணுவத்தின் அராஜகத்தை உலக நாடுகள் பலவும் கடுமையாகக் கண்டித்தன. இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்திவரும் நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷே பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்தது உண்மைதான்" என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது .மேலும், அதேபோன்று, ``விடுதலைப்புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டார்கள்' என்று அவர் கூறியிருந்ததாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருந்தது. 

ஆரம்பத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தபோது, அதை மறுத்துவந்தார் ராஜபக்‌ஷே. தற்போது, இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது உண்மைதான் என்று அவர் கூறியதாகத் தகவல் வெளியாகி இருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. மேலும், இலங்கையில் இருதரப்புக்கும் போர் நடந்துகொண்டிருந்தபோது அதிபராக இருந்த ராஜபக்‌ஷேதான் இப்படியான யுக்திகளைக் கையாண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறார் என்று, அவர்மீது மிக அழுத்தமாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதை மறுத்துவந்தவர் ராஜபக்ஷே. அப்படிப்பட்ட அவரே உண்மையை ஒப்புக்கொள்வரா? அப்படியே உண்மையை ஏற்றுக்கொண்டால் என்ன நிலை ஆகும் என்பதை அறியாதவரா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது குறித்து இலங்கையில் உள்ள தமிழக ஈழ ஆதரவாளர்களிடம் பேசினோம்.

சிவாஜிலிங்கம் இலங்கை முன்னாள் எம். பி

முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், ``போர்க் குற்றம் நடந்தது உண்மை என்று ராஜபக்‌ஷே  கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருப்பதில் எந்த உண்மையும் இல்லை. அப்படியான செய்தி இலங்கையில் உள்ள எந்தச் செய்தித் தாள்களிலும் வெளியாகவில்லை. அவர் எந்த நிலையிலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதே உண்மை. இந்தப் போர்க் குற்ற விவகாரத்தில் ராஜபக்‌ஷே மற்றும் தற்போதைய அதிபர் மைத்ரி பாலசிறீசேன ஆகியோர் ஈடுபட்டார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள்மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். போரில் வெற்றிபெறுவதற்காகப் போர் விதிகளை மீறி அங்குப் பல குற்றங்களைச் செய்துவிட்டு, இங்கு எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று அப்பட்டமாகப் பச்ச பொய்யைச் சர்வதேச சமூகத்துக்கு கூறியவர்தான் ராஜபக்‌ஷே. அப்படிப்பட்டவர் எவ்வாறு கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொள்வார்? போரை வழிநடத்திக் கொலையைச் செய்தவர் அல்லவா? அதனால் அந்தக் குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். கொலைக் குற்றத்தை எற்றுக்கொள்கிற அளவுக்கு, பெருந்தன்மை குணம் ராஜபக்‌ஷேவிடம் இல்லை. இதுதொடர்பாக இந்திய அரசே கேட்டாலும் அவர் திருந்தமாட்டார்" என்றார்.

இதுகுறித்து பத்திரிகை ஆசிரியர் வித்யாதரன், ``ராஜபக்‌ஷே அப்படிப் பேசவே இல்லை. சிங்கள ராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறினாரே தவிர, இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்தது உண்மைதான் என்று அவர் சொல்லவில்லை. ராஜபக்‌ஷே அதிபர் பதவியில் இல்லை என்றாலும், எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய அதே அதிகார தொனியில்தான் தற்போதும் இருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் அதிபராக இருந்தபோது 18 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மைத்ரிபால சிறீசேன வந்தபிறகு அவர் எந்தப் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கவில்லை. தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்தை நடத்த அவருக்காகக் காத்திருந்தும் அவர் போகவில்லை. எப்போதும் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யும் மனநிலையில் ராஜபக்‌ஷே இல்லை. அதனால் போர்க் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை" என்றார். 

 


டிரெண்டிங் @ விகடன்