மறுசுழற்சி மின்னணுக் கழிவுகளில் தயாரிக்கப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள் - டோக்கியோ ஒலிம்பிக் 2020 | Tokyo 2020 Olympic Games medals to be created from recycled e-waste

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (08/02/2019)

மறுசுழற்சி மின்னணுக் கழிவுகளில் தயாரிக்கப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள் - டோக்கியோ ஒலிம்பிக் 2020

மின்னணு கழிவுகள்

2020 இல் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனைத்துப் பதக்கங்களும் மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணுக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படவுள்ளது. ஒலிம்பிக் மட்டுமல்லாமல் பாரலிம்பிக் போட்டிகளின் பதக்கங்களும் இவற்றைக் கொண்டே தயாரிக்கப்பட உள்ளன.

மின்னணுக்கழிவுகளில் சிறிய அளவே இருக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றைக் கொண்டு பதக்கங்களைத் தயாரிக்கின்றனர். இதற்காக மின்னணுக் கழிவுகளைச் சேகரிக்கும் பணி 2017-ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது, பழைய ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கேமராக்கள், மடிக்கணினிகள் கூட இந்தப் பொருள்களில் அடக்கம். பதக்கங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான இலக்கை இந்த மார்ச் இறுதிக்குள் எட்டிவிடுவோம் என ஒலிம்பிக் போட்டியின் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அமைப்பாளர்கள் ஏற்படுத்திய இலக்கின்படி 30.3 கிலோ கிராம் தங்கம், 4,100 கிலோ கிராம் வெள்ளி, 2,700 கிலோ கிராம் வெண்கலம் சேகரிக்கப்பட வேண்டும். இவற்றில் வெண்கலத்திற்கான இலக்கைக் கடந்த ஜுன் மாதமே அடைந்துவிட்டனர். வழக்கற்றுப் போன மின்னணுச் சாதனங்களைச் சேகரிப்பதில் அரசு அமைப்புகளுக்குப் பொதுமக்களும் உதவி செய்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் 500 நாள்கள் உள்ளன. எனவே ஜப்பான் முழுவதுமே அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கங்களின் வடிவமைப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகலாம். 

இதற்கு முன்பே ஒலிம்பிக் பதக்கங்களை உருவாக்க மறுசுழற்சி உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரியோவில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களில் 30%  மறுசுழற்சி உலோகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை. உலகம் முழுவதும் மின்னணுக் கழிவுகளின் அளவு அதிகரித்து வருவதால் அது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இதைச் செய்கின்றனர்.