``நான்கு குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வருமான வரிவிலக்கு!" - அதிரடி பிரதமர் #GuessWho? | This Prime Minister announced tax benefits for families with four or more children

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (13/02/2019)

கடைசி தொடர்பு:15:46 (13/02/2019)

``நான்கு குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வருமான வரிவிலக்கு!" - அதிரடி பிரதமர் #GuessWho?

``நான்கு குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வருமான வரிவிலக்கு!

நான்கு குழந்தைகள் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வரிவிலக்கு அளிக்கப்படும்' என்ற அதிரடி அறிவிப்பை முன்வைத்திருக்கிறது ஹங்கேரி நாட்டின் வலதுசாரி `ஃபிடெஸ்' அரசு. ஹங்கேரி நாட்டின் மக்கள்தொகை, 1980-களின் தொடக்கத்திலிருந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான சரிவிற்கு ஆளாகியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 28,000 என்ற ரீதியில் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகிறது. 2017-ம் ஆண்டு மக்கள்தொகை 32,900 வரை சரிந்துள்ளது. அதன்பொருட்டு ஹங்கேரியின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஏழு அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன். 

விக்டர் ஆர்பன் அறிவித்த வருமான வரிவிலக்கு

ஹங்கேரி நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில், அந்த நாட்டில் இஸ்லாமிய மக்களின் குடியேற்றத்தை மக்கள்தொகை சார்ந்திராமல் இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் பிரதமர் விக்டர். கடந்த 2003-ம் ஆண்டு முதல் தற்போதுவரை தேசியப் பழைமைவாதக் கட்சியான `ஃபிடெஸ்' கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். `தமிழ்நாடு தமிழர்களுக்கே' என்பதுபோல `ஹங்கேரி ஹங்கேரியர்களுக்கே' என்பதையே தன் அரசியல் சாராம்சமாகக் கொண்டிருக்கிறார் அந்நாட்டு பிரதமர். 

இஸ்லாமிய மக்கள் ஹங்கேரியில் குடியேறும் விவகாரத்தில் முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் விக்டர் ஆர்பன். இவர் கடந்த ஏப்ரல் மாதம், ஹங்கேரி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ``ஹங்கேரியர்களுக்கு மட்டுமான நாடாக இருக்கவைப்பதே என் பணி" என்று கூறினார். 

பிறப்பு விகிதம் அதிகரிக்கக் கொண்டுவந்த திட்டத்தைப் பற்றி ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன், ``எதிர்காலத்தில் ஹங்கேரி மக்கள்தொகை புலம்பெயர்ந்து வருவோரின் குடியேற்றத்தைச் சாராமல் இருப்பதற்காகத்தான் இந்த 7 அம்சத் திட்டத்தை முன்வைக்கிறேன். மக்கள்தொகையில் ஹங்கேரிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம். ஐரோப்பா முழுவதுமே குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் இந்த நிலைக்குக் காரணம், இங்கு புலம்பெயர் மக்களின் குடியேற்றம்தான். குடியேறுபவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் சேருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது" என்றார்.

பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்த 7 அம்சத் திட்டத்தில், முக்கியமான ஐந்து குறிப்பிடத்தக்க அம்சங்கள்:-

* நான்கு மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுக்க வருமான வரிவிலக்கு.

* மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உள்ள குடும்பங்கள், ஏழு இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்குவதற்கு 2.5 மில்லியன் ஹங்கேரியன் ஃபோரின்டஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 6,28,000) மானியம் வழங்கப்படும்.

* முதல் முறையாக திருமணம் செய்யும் 40 வயதுக்குக் கீழுள்ளவர்கள், 10 மில்லியன் ஹங்கேரியன் ஃபோரின்ட்ஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,00,000) வட்டி இல்லா கடன் கொடுக்கவும், அவர்கள் மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் கடன் ரத்து செய்யப்படும்.

* அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 21,000 இடங்களில் சிறுவர் வளர்ப்பகங்கள் அமைக்கப்படும்.

* நாட்டில் உள்ளவர்களின் மருத்துவ நலன்களுக்காக கூடுதலாக இரண்டரை பில்லியன் டாலர் செலவு செய்யப்படும்  

இந்த 7 அம்சத் திட்டத்தை அறிவித்த பின்னர், வரும் மே மாதம் வரவிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிப் பேசினார்:

ஹங்கேரி

``ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை, அதிகக் குடியேற்றங்கள் ஏற்படுவதை விரும்புகிறது. குடியேற்றங்களை விரும்புவோர், குடியேறுபவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நாட்டில் இனக் கலப்பு ஆவதால் என்ன நன்மை அடைகிறார்கள் எனத் தெரியவில்லை. ஐரோப்பிய இடதுசாரிகள், இந்தக் கண்டத்திலுள்ள நாடுகளிலும், குடும்பங்களிலும் கிறித்துவ வாழ்வு முறையைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில் உள்ளனர்" என்றார்.

விக்டர் ஆர்பனின் பேச்சுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, அவருக்கு எதிராக ஒரு பேரணியை நடத்தினார்கள். அவரின் சகிப்புத்தன்மையற்ற கொள்கையையும், வறட்டு வலதுசாரி கொள்கையையும் அந்நாட்டு பெரும்பாலான பத்திரிகைகளும், இடதுசாரிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 'இத்தகையத் திட்டங்களுக்கு வீணாகச் செலவழிப்பதைத் தவிர்த்து, வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்' என்பன போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி, அந்த நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், 14.7 சதவிகிதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 


டிரெண்டிங் @ விகடன்