வெள்ளத்தில் ஐந்து லட்சம் உயிரினங்கள் இறப்பு! - சோகத்தில் ஆஸ்திரேலியா | Australia floods affected 5 lakhs animals

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (13/02/2019)

வெள்ளத்தில் ஐந்து லட்சம் உயிரினங்கள் இறப்பு! - சோகத்தில் ஆஸ்திரேலியா

ஸ்திரேலியாவுக்கு இது போதாத காலகட்டம்போல. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த வெப்பநிலை முற்றி, இந்த ஆண்டு வடமேற்குப் பகுதியில் வறட்சி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிகமான கவலையில் இருந்த ஆஸ்திரேலியா மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத மழை பெய்துள்ளது. இதன் காரணமாகக் குயின்ஸ்லாந்து பகுதியே நீரில் மிதக்கிறது. அதிகப்படியான வெள்ளம் காரணமாக சாலைகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு அம்மக்கள் முடங்கிப் போயுள்ளனர்.

வெள்ளத்தில் மடிந்த உயிர்கள்

ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடான காலநிலை நிலவிவருகிறது. 
இந்த வெள்ளத்தால், வன உயிரினங்கள் அதிகமாகப் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. இதனால் 5 லட்சம் உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆற்றில் இருந்த முதலைகளும் வெளியில் நீந்திக்கொண்டிருப்பதால் மக்கள் வெளியேறுவதற்கு அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதுவரை 20,000 வீடுகளுக்கும் மேல் வெள்ளத்தில் சிக்கின. மொத்த சேதம் 213 மில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிகமாக இறந்து கிடக்கும் உயிரினங்களை உடனே அப்புறப்படுத்தாவிட்டால் மக்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிகமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடப்பதால் அதிகாரிகளால் சில பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ஒருபக்கம் வறட்சி, ஒரு பக்கம் வெள்ளம் என இரண்டு சூழல்களும் ஒரே நேரத்தில் நீடிப்பதால் ஆஸ்திரேலியா அவதிப்பட்டு வருகிறது.