வாடிக்கையாளர் ஆதார் தகவல்களைக் கசியவிட்ட இண்டேன்! - பிரான்ஸ் இணைய ஆய்வாளர் புகார் | Indane leaked millions of Aadhaar numbers, alleges activist

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (19/02/2019)

வாடிக்கையாளர் ஆதார் தகவல்களைக் கசியவிட்ட இண்டேன்! - பிரான்ஸ் இணைய ஆய்வாளர் புகார்

இந்தியாவின் மிகப்பெரிய கேஸ் நிறுவனங்களில் ஒன்றான இண்டேன் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களைத் தனது இணையதளத்தில் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இண்டேன் நிறுவனம், பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை நிர்வகித்து வருகிறது. இந்த இணையதளத்தில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்களுக்கென லாக்இன் பக்கங்கள் இருக்கின்றன. இதிலிருக்கும் வாடிக்கையாளர்களின் விவரங்கள்தான் இணையப் பாதுகாப்பின்மை காரணமாகக் கசிந்துள்ளதாகப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணையதள ஆய்வாளர் எல்லியட் ஆல்டர்சன், தனது ப்ளாக்கில் கூறியுள்ளார்.

ஆதார்

இதுகுறித்து அவரது ப்ளாக்கில், ட்விட்டர் மூலம் தனக்கு வந்த தனிப்பட்ட தகவலில், இண்டேன் இணையதளத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பெயர், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தன்னிடம் ஒருவர் பகிர்ந்ததாகக் கூறியுள்ளார். இணையதளப் பாதுகாப்பு குறித்து ஏற்கெனவே பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துள்ள அவர், இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்வதற்காக அத்தகவலை அனுப்பியவருடன் தொடர்ந்து உரையாடி இண்டேன் இணையப்பக்கத்தினுள் நுழைவதற்கான கோடிங்கைப் பெற்றிருக்கிறார். அந்தக் கோடிங்கில் முகவரின் அடையாள எண் விவரங்களை மட்டும் மாற்ற, மாற்ற அடுத்தடுத்த முகவர்களின் பக்கங்களை மிக எளிதாகக் காணமுடிந்துள்ளது.

இண்டேன் 

இவருக்கு மொத்தம்11,062 முகவர்களின் விவரங்கள் கிடைத்திருக்கிறது. அவற்றிலிருந்து 9,490 முகவர்களின் வாடிக்கையாளர் விவரப் பக்கத்தின்மூலம் மொத்தம் 67,91,200 வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைப் பெற்றிருக்கிறார். மேலும், விவரங்களைப் பெறுமுன்னர், இவரது கோடிங்கை இண்டேன் தளம் ப்ளாக் செய்திருக்கிறது. எனவே, அவருக்குக் கிடைத்ததில் மீதமுள்ள 1,572 முகவர்களின் வாடிக்கையாளர் விவரங்களை மட்டும் பெறமுடியவில்லை என்று தனது வலைப்பக்கத்தில் விவரித்துள்ளார். இப்படி இண்டேன் தளத்தில் எளிதாக நுழைந்து வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைப் பெறும்படியாகப் பாதுகாப்பற்ற முறையில் அதன் இணையதளம் இருப்பதாக அவர்  கூறியுள்ளார். இண்டேன் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ள செய்தி, அந்நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close