அடுத்த 5 வருடங்களுக்குள் 2000 திமிங்கிலங்களைக் கொல்லத் திட்டம் - ஐஸ்லாந்து அரசு | Iceland plans to slaughter more than 2,000 whales within the next five years

வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:21 (23/02/2019)

அடுத்த 5 வருடங்களுக்குள் 2000 திமிங்கிலங்களைக் கொல்லத் திட்டம் - ஐஸ்லாந்து அரசு

அடுத்த ஐந்து வருடங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திமிங்கிலங்களைக் கொல்ல இருப்பதாக ஐஸ்லாந்து நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கிலங்கள்

அடுத்த ஐந்து வருடங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திமிங்கிலங்களைக் கொல்ல இருப்பதாக ஐஸ்லாந்து நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சந்தையில் திமிங்கிலங்களின் இறைச்சி தடை செய்யப்பட்ட போதிலும் பொதுமக்களின் எதிர்ப்பு இருந்தும் ஐஸ்லாந்து அரசு திமிங்கில வேட்டையின் மீது போடப்பட்ட சர்வதேச தடைக்கு எதிராகத்தான்  நிற்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் 209 ஃபின் திமிங்கிலங்களையும் (fin whales)  217 மிங்க் திமிங்கிலங்களையும் (minke whales) ஐஸ்லாந்து கடலில் வேட்டையாடலாம் என அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இந்த திமிங்கல வேட்டையானது 2023 வரை தொடரும் எனவும் கூறியுள்ளனர். வேட்டையாடப்படும் திமிங்கிலங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் நிலையானதாக இருக்கும் என்றும் இந்த எண்ணிக்கை அறிவியல் ஆய்வுகள் மற்றும் தரவுகள் மூலமே உறுதி செய்யப்பட்டுள்ளது என ஐஸ்லாந்தின் மீன்வள மற்றும் வேளாண்மை அமைச்சர் கிறிஸ்டன் தோர் ஜூலியூசன் கூறியுள்ளார்.

கடந்த வருடம் அரிய வகை இரு நீல நிற ஃபின் திமிங்கிலங்களைக் கொன்றதற்காக ஐஸ்லாந்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. திமிங்கிலங்களைத் தொடர்ந்து கொல்லும் இந்த முடிவானது விரும்பத்தகாதது. பூமியிலேயே அமைதியான அறிவான உயிரினம் திமிங்கிலங்கள். அவை மனிதர்களை எந்தத் தொந்தரவும் செய்ததில்லை. அதையும் மீறி திமிங்கிலங்களை வேட்டையாடுவதன் காரணம் பொருளாதரரீதியான பலன்களைப் பெறுவதற்குத்தான் என்கிறார் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின் பாதுகாப்பாளரான வனீசா வில்லியம்ஸ்-கிரே (Vanessa Williams-Grey)

திமிங்கிலங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்த காரணத்தாலும் திமிங்கிலங்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி வடக்கு அட்லாண்டிக் கடலில் மட்டும் 37,000 திமிங்கிலங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை 1987-ம் ஆண்டு இருந்த திமிங்கிலங்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த தரவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் திமிங்கிலங்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கும்நிலையில் இந்த வேட்டையானது கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

திமிங்கிலங்களை வேட்டையாடுவதால் கிடைக்கும் வருமானத்தைவிட அவை உயிருடன் இருக்கும்போதே அதைவிட அதிகமான வருமானத்தை ஈட்ட முடியும் என பல்வேறு நாட்டினரும் கூறுகின்றனர்.  தற்போது ஜப்பானிலும் திமிங்கில வேட்டைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close