`பயணம் சிறப்பாக அமைய வேண்டும்’ - விமான இன்ஜினில் சில்லறைக் காசுகளை வீசிய பயணி! | Chinese airline sues passenger who threw coins into engine

வெளியிடப்பட்ட நேரம்: 21:07 (26/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (26/02/2019)

`பயணம் சிறப்பாக அமைய வேண்டும்’ - விமான இன்ஜினில் சில்லறைக் காசுகளை வீசிய பயணி!

சீனாவில் விமானம் புறப்படும் முன் பயணி ஒருவர், விமானம் நல்லபடியாக செல்ல வேண்டும் என்பதால் இன்ஜினுக்குள் சில்லறை காசை வீசியிருக்கிறார். இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதுடன், குறிப்பிட்ட விமான நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காசை வீசிய பயணி விமான நிறுவனம் சார்பில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விமான சேவை

சீனாவில் செயல்பட்டுவருகிறது லக்கி ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம். அந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த 17-ம் தேதி சீனாவில் உள்ள அன்கிங் அனூயி (Anqing, Anhui)யிலிருந்து குன்மிங்  (Kunming, Yunnan) என்ற இடத்துக்கு 162 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால், விமான இன்ஜினில் பிரச்னை ஒன்று தென்படவே விமானம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

28 வயதான லூ, விமானத்தின் இடது இன்ஜினில் ஒரு யுவான் சில்லறை காசை தூக்கி எரிந்தது தெரியவந்தது. இதனால் லக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இந்திய ரூபாயில் 14 லட்ச ரூபாய்க்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ``மூடநம்பிக்கையுள்ள அந்த நபர், தன் மனைவி மற்றும் ஒரு வயதான தன் மகளுடன் விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். ஒரு யுவான் சில்லறையை இன்ஜினுக்குள் போட்டால், பயணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்துள்ளார்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை

அந்த நபர் கைது செய்யபட்டு, 7 நாள்களுக்குப்பின், அவர் எறிந்த காசு இன்ஜினிலிருந்தது கண்டறியப்பட்டது. ``இந்த நிகழ்வால் 14 லட்சத்துக்கும் மேல் எங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சட்டப்படி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்போம்” என லக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஜினுக்குள் சிக்கிய சில்லறையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேநிலையில், விமானம் புறப்பட்டிருந்தால் நடுவானில் வேகத்தை இழந்து விபத்துக்குள்ளாயிருக்கும். பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லக்கி ஏர்லைன்

இதையடுத்து, மறுநாளே பயணிகள் மற்றொரு விமானத்துக்கு மாற்றப்பட்டு பயணம் செய்தனர். சீனாவில் விமான இன்ஜினில் காசை தூக்கி எறிவது இது முதன்முறையல்ல. மூடநம்பிக்கை காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 80 வயதான மூதாட்டி ஒருவர் சில்லறைகளை இதேபோல இன்ஜினில் எறிந்ததால் 1 மில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

வயது முதிர்வின் காரணமாக அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. `பொதுமக்கள் சட்டங்களை மதித்து, இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மூட நம்பிக்கைகளை தவிர்ப்பதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய முடியும்” என லக்கி ஏர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு, ``லக்கி ஏர் நிறுவனத்துக்கு லக்கி இல்லாமல் போனது’ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.


[X] Close

[X] Close