ஒரு வெங்காய அளவிலேயே பிறந்த குழந்தை! - உலகின் மிகச் சிறிய அதிசயம் | World’s smallest baby boy born at just over 268 g

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (27/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (27/02/2019)

ஒரு வெங்காய அளவிலேயே பிறந்த குழந்தை! - உலகின் மிகச் சிறிய அதிசயம்

உலகில் அன்றாடம் பல வியக்கவைக்கும் விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக நன்கு வளர்ந்த ஒரு பெரிய வெங்காயத்தின் எடைக்குச் சரிசமமாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பெயர் அறிவிக்கப்படாத ஓர் ஆண் குழந்தை தாயின் கருவில் இருக்கும்போது ஆறுமாதத்தில் அதன் வளர்ச்சி தடை பட்டுள்ளது. பிறகு, வயிற்றில் இருந்த நான்கு மாதங்களும் முற்றிலும் வளராத நிலையிலேயே இருந்துள்ளது. 

குழந்தை

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும்போது வெறும் 268 கிராம் எடையுடன் மட்டுமே பிறந்துள்ளது. ஆனால், குழந்தை எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்துள்ளது. இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட மருத்துவர்கள், மேலும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் உயர் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணித்துள்ளனர். ஆறு மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அந்தக் குழந்தை 3.238 கிலோ கிராம் வளர்ந்துள்ளது.

இது பற்றி பேசிய குழந்தையின் தாய், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. என் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டான். அவன் பிறந்த பிறகு, மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டு அவன் உயிர் பிழைக்க மாட்டான் என்றுதான் நினைத்தேன். ஆனால், தற்போது மகிழ்ச்சியாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். 

குழந்தையைப் பராமரித்த மருத்துவர் டகேஷி அரிமிட்சு (Takeshi Arimitsu), ‘குழந்தை மிகவும் குறைவான உடல் எடையுடன் பிறந்து தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. நாங்கள் தற்போது அவனை டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம். அவன் பிறந்தபோது நம் உள்ளங்கையில் அடங்கும் அளவில்தான் இருந்தான்’ எனக் கூறியுள்ளார்.

 உலகிலேயே மிகவும் குறைந்த எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற சாதனையை அந்தக் குழந்தை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தை ஒன்று 274 கிராம் உடல் எடையுடன் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close