`போர் ஆபத்தானது; ஆதாரம் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன்!'- இந்தியாவுக்கு இம்ரான் கான் வேண்டுகோள் | pakistan PM Imran Khan talks about palakot attack

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (27/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (27/02/2019)

`போர் ஆபத்தானது; ஆதாரம் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன்!'- இந்தியாவுக்கு இம்ரான் கான் வேண்டுகோள்

``போர்த் தொடுக்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை'' என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

புல்வாமா தாக்குதலுக்கு நேற்று இந்திய விமானப் படை தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய விமானப் படை தரப்பிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப் பெரிய முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து இன்று இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. நமது படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சண்டையின்போது இந்திய விமானம் ஒன்று கீழே விழுந்தது. இந்த விமானத்தில் இருந்த விமானி அபிநந்தன் என்பவரைப் பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது. அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள் இரு நாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``புல்வாமா பாதிப்புக்குள்ளானவர்களின் குடும்பங்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். பல தசாப்தங்களாக நாங்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்தோம். ஏன் நான்கூட ஒரு குண்டுத் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவமனைகளுக்கு வந்துள்ளேன். போர் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆரம்பத்திலிருந்தே புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் கேட்டு வருகிறோம். இந்தியா தகுந்த ஆதாரம் தந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். வரலாற்றில் ஏற்பட்ட போர்கள் அனைத்தும் தவறான அனுமானங்களால் உருவானவை. போரைத் தொடங்குபவர்களுக்குத் தெரியாது அது எப்போது முடியும் என்று. தவறான கணிப்பால்தான் போர்கள் நடக்கின்றன. 

தவறாகக் கணித்தால், நாம் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படும். போர் நடந்துவிட்டால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. அதனால் இந்த விவகாரத்தில் சரியான புரிதல் வேண்டும். பாகிஸ்தான் - இந்தியா இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும். புலவாமா தீவிரவாத தாக்குதல் உட்பட மற்ற அனைத்துப் பிரச்னைகளையும் பேசித் தீர்க்க இந்தியாவை நான் அழைக்கிறேன். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும். போரால் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படாது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை. ஏனெனில் விமானப் படை தாக்குதலால் எங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்பட்டதாக நாங்கள் எண்ணவும் இல்லை. எங்களுக்கு அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிரூபிக்க மட்டுமே இன்று தாக்குதல் நடத்தினோம். எங்கள் எல்லைக்குள் நீங்கள் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் என்பதைக் காட்டத்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும். போரால் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படாது. " எனக் கூறி முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close