``சுரங்கத்திலிருந்து அழுகுரல்கள்!’’ - பதற வைக்கும் இந்தோனேசி்யா | Dozens buried by landslide at illegal goldmine in Indonesia

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (27/02/2019)

கடைசி தொடர்பு:19:33 (27/02/2019)

``சுரங்கத்திலிருந்து அழுகுரல்கள்!’’ - பதற வைக்கும் இந்தோனேசி்யா

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர்.

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் அனுமதியின்றி சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்று. அதுவும் அவை அனைத்தும் ஆபத்தான சூழலில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் செயல்பட்டு வருபவை. இந்நிலையில் நேற்று வடக்கு சுலவேசியில் உள்ள போலாங் மோங்கோண்டோவ் பகுதியில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தத் தங்கச் சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாகச் சிக்கிக் கொண்டனர். தற்போது வரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டதும் இடிபாடுகளுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். மீட்புக் குழு வரும் வரை எந்தவித உபகரணங்களுமின்றி சில தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.

இந்தோனேசியா

இந்தச் சம்பவம்குறித்து உள்ளூர் பேரிடர் மீட்புக்குழு அதிகாரி அப்துல் கூறுகையில், ``தங்கச் சுரங்கம் அமைந்துள்ள பகுதி மிகவும் கரடுமுரடான மலைப்பகுதி. எந்த வாகனமும் உள்ளே செல்ல முடியாது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட உள்ளே செல்ல முடியாது. நடந்துபோவது மட்டுமே ஒரே வழி. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க நாங்கள் உள்ளே செல்லும்போது, சுரங்கத்தினுள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான கட்டமைப்புகள் உடைந்து மேலும் நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன.

இந்தோனேசியா

சுரங்கத்தினுள் செல்லச் செல்ல மண்ணின் தன்மை மிகவும் ஈரப்பதமாக உள்ளது. மேலும், உள்ளே சின்னச் சின்ன சுரங்கத் துளைகளும் உள்ளன. அவற்றில் சிக்கியிருப்பவர்களை மீட்பது மிகவும் சவாலான ஒன்று. இடிபாடுகளிலிருந்து அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், நாங்கள் உள்ளே சென்றால் மேலும் மண்சரிவு ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது. செய்வதறியாமல் தவிக்கிறோம். இப்படியோர் ஆபத்தான சூழலில் சுரங்கங்களை நடத்துபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியா காவல்துறை, பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், ரெட் கிராஸ் அமைப்பு என அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றியும் பாதுகாப்பின்றியும் இயங்கி வந்த சுரங்கங்களை ஒழித்துக்கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தோனேசிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close