நியூயார்க்கைவிட இருமடங்கு பெரியது - அன்டார்டிகாவில் உடைந்து விழும் பனிப்பாறை! | Iceberg twice the size of New York City is set to break away from Antarctica

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (02/03/2019)

கடைசி தொடர்பு:07:55 (02/03/2019)

நியூயார்க்கைவிட இருமடங்கு பெரியது - அன்டார்டிகாவில் உடைந்து விழும் பனிப்பாறை!

அன்டார்டிகா

நியூயார்க் நகரத்தைவிட இருமடங்கு பெரிய பனிப்பாறை அன்டார்டிகா பனிமலையிலிருந்து உடைந்து விழ இருக்கிறது. பரவி வரும் பிளவின் காரணமாக இந்த நிகழ்வு நடக்க இருப்பதாக நாசா கூறியுள்ளது. நாசா தகவல்களின்படி அன்டார்டிகாவின் ப்ரண்ட் ஐஸ் ஷெல்ஃப் (Brunt Ice Shelf) பகுதியில் அக்டோபர் 2016-ல் இந்த பிளவு முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிப் பரவிய இந்த பிளவு மற்றொரு பிளவைச் சந்திக்க இருக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்தப் பிளவு மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் நிலையாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது வருடத்துக்கு 2.5 மைல் தூரத்துக்குப் பரவி வருகிறது. சில வாரங்களில் இந்த இரண்டு பிளவுகளும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படிச் சந்தித்தால் 660 சதுர மைல் பரப்பளவுடைய பனிப்பாறை உடைந்து விழும் என்கின்றனர் நாசாவினர்.

பனிமலையிலிருந்து பனிப்பாறை உடைந்து விழும் நிகழ்வு இயற்கையாகவே நடைபெறக்கூடியதுதான் ஆனால், தற்போது நடைபெறும் மாற்றங்கள் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சமீபகாலங்களில் இவ்வாறு பனிப்பாறைகள் உடைந்து விழும் நிகழ்வுகள் அதிகமாக நடக்கின்றன. அவை எல்லாம் அளவில் பெரியதாகவே இருக்கிறது. ஜூலை, 2017-ம் ஆண்டு லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப் (Larsen C ice shelf.) பகுதியில் நடைபெற்ற பனிப்பாறை உடைவுதான் இதுவரை நடந்தவற்றில் மிகப்பெரியது. அதன் பரப்பளவு 2,200 சதுர மைல். நீண்டகாலமாக நடைபெற்று வரும் பனிப்பாறை உருகுதல் கடல் மட்ட உயர்வில் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த ஐந்து வருடத்தில் பனிப்பாறை உருகும் வேகம் அதிகரித்துள்ளது. வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைக்கப்படாவிட்டால் 2070-ம் ஆண்டுக்குள் 25 செமீ அளவுக்குக் கடல் மட்ட உயர்வு ஏற்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


[X] Close

[X] Close