தீவிரவாத ஒழிப்பு - குர்ஆனையும் மகாத்மாவையும் மேற்கோள் காட்டிய சுஷ்மா ஸ்வராஜ்! | Did sushma swaraj warns Pakistan indirectly? twitterati puzzles

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (02/03/2019)

தீவிரவாத ஒழிப்பு - குர்ஆனையும் மகாத்மாவையும் மேற்கோள் காட்டிய சுஷ்மா ஸ்வராஜ்!

இன்று அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது (ஓ.ஐ.சி) 1.9 பில்லியன் மக்கள் அடங்கிய 47 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாகும். முதன் முறையாக கௌரவ விருந்தினராக இந்தியாவுக்கு இக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததையடுத்து சுஷ்மா கலந்துகொண்டு பேசியுள்ளார். 

சுஷ்மா ஸ்வராஜ்

இக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா குர்ஆனையும் மகாத்மா காந்தியையும் மேற்கோள் காட்டி மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ``குர்ஆனின் வாசகமான `மதத்தில் எந்த கட்டாயமும் இல்லை' என்பதையும் அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்று கூட வன்முறை என்னும் அர்த்தத்தை தரவில்லை. இவ்வாறு இருக்கையில் பயங்கரவாதம், மதத்தின் திசைதிருப்புதலையும் தவறான நம்பிக்கை விதைப்பதையும் செய்து வருவது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது" எனக் கூறினார். பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல், பயங்கரவாத குழுக்களை தங்கள் நாட்டில் ஆதரித்து அவற்றின் வளர்ச்சிக்கு நிதியளிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மகாத்மா காந்தியின் மண்ணான இந்தியா எப்போதும் அமைதியை விரும்புவதாகவும் இந்தியாவின் எல்லைகளை மீறுவது எச்சரிக்க தகுந்தது எனவும் தனது 15 நிமிட உரையில் சுஷ்மா குறிப்பிட்டிருக்கிறார். 

தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து சுஷ்மா இவ்வாறு பேசியிருப்பது ட்விட்டர் போன்ற வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓ.ஐ.சி. கூட்டமைப்புக்கு இந்தியாவை கௌரவ விருந்தினராக அழைத்ததின் காரணமாக பாகிஸ்தான் தனது வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியை அனுப்ப மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close