ஆப்பிரிக்காவில் அணை கட்டும் சீன நிறுவனம், 1500-க்கும் மேற்பட்ட சிம்பன்சிகளுக்கு ஆபத்து | Chinese dam project in Guinea could kill up to 1,500 chimpanzees

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:06:30 (03/03/2019)

ஆப்பிரிக்காவில் அணை கட்டும் சீன நிறுவனம், 1500-க்கும் மேற்பட்ட சிம்பன்சிகளுக்கு ஆபத்து

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கினியா (Guinea) நாட்டில் சீன நிறுவனம் அணை கட்டுவதால் 1,500 சிம்பன்சிகள் வரை இறக்கக் கூடும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  கி

சிம்பன்சி

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கினியா (Guinea) நாட்டில் சீன நிறுவனம் அணை கட்டுவதால் 1,500 சிம்பன்சிகள் வரை இறக்கக் கூடும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கினியாவில் 294 மெகாவாட் மின்சாரத் திறன் கொண்ட  கௌகௌதம்பா அணை (Koukoutamba dam) சினோஹைட்ரோ (Sinohydro) எனும் சீன நிறுவனத்தால் கட்டப்படவுள்ளது. சினோஹைட்ரோ நிறுவனமானது உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டமைத்த நிறுவனமாகும். தற்போது கினியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட மோயன்-பாஃபிங் தேசிய பூங்காவுக்கு (Moyen-Bafing National park.) நடுவே கௌகௌதம்பா அணையைக் கட்டவுள்ளது. இதனால் அங்குள்ள அரிய உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சின்ஹைட்ரோ நிறுவனத்தின் மீது ஏற்கெனவே இதுபோன்ற மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தோனேசியாவில் உரங்குட்டான் குரங்குகளுக்கு அச்சுறுத்தும்விதமாக அணை கட்டியதாக கூறப்படுகிறது. 

கடந்த வாரம் கௌகௌதம்பா அணைக்கான ஒப்பந்தம் உள்ளூர் பிரதிநிதிகளிடம் கையெழுத்திடப்பட்டது.  அணைக் கட்டப்பட்டபின் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் 8,700-க்கும் அதிகமான இடம்பெயர வேண்டியிருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் 80% குறைந்துவிட்ட வெஸ்டர் சிம்பன்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மோயன்-பாஃபிங் தேசிய பூங்காவானது 2016-ம் ஆண்டுதான் அமைக்கப்பட்டது. இரண்டு சுரங்கத் தொழில் நிறுவனங்கள் சிம்பன்சிகளைக் காப்பதற்காகப் பூங்கா அமைவதற்கு நிதி அளித்துள்ளனர். ஒருவேளை இந்த அணை அமைக்கப்பட்டால் ஏற்படும் வெள்ளத்தாலும் அல்லது பிராந்திய மோதல்களாலும் 800 - 1500 சிம்பன்சிகள் வரை இறக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கௌகௌதம்பா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அரியவகை நீர்வாழ் மூலிகைக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும் இதுவரை 1,50,000 மக்கள் அணைக் கட்டுமானத்தை நிறுத்தி வைக்குமாறு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.


[X] Close

[X] Close