பிரியங்கா சோப்ராவின் பதவியைப் பறியுங்கள்! - ஐ.நாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை | Pak Petition Seeks Priyanka Chopra's Removal as UNICEF Goodwill Ambassador

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:29 (04/03/2019)

பிரியங்கா சோப்ராவின் பதவியைப் பறியுங்கள்! - ஐ.நாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை

பால்கோட் தாக்குதலுக்கு ஆதரவாக ட்விட்டரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா `ஜெய்ஹிந்த்’ என்று பதிவிட்டதைச் சுட்டிக்காட்டி அவரது பதவியைப் பறிக்க ஐக்கிய நாடுகள் அவைக்கு பாகிஸ்தானிலிருந்து கோரிக்கைக் குரல் எழுந்திருக்கிறது.

பிரியங்கா சோப்ரா

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தநிலையில், பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத தளத்தின் மீது இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. இதில், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்.16 ரக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதேபோல், இந்தியா தரப்பில் மிக்.21 ரக விமானம் ஒன்றை இழந்தது. மேலும், விமானி அபிநந்தனை பாகிஸ்தான் படைகள் சிறைப்பிடித்தன. பின்னர், 72 மணி நேரத்துக்குப் பின்னர்  அவர் விடுவிக்கப்பட்டார். வாகா எல்லை வழியாகத் தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லி விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா சோப்ரா ட்வீட்

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவை இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கியுள்ள யுனிசெஃப் நல்லெண்ணத் தூதர் பதவியைப் பறிக்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். Avaaz.org என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், `அணு ஆயுத பலம் கொண்ட இருநாடுகள் இடையிலான போர் என்பது பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதரான பிரியங்கா சோப்ரா, இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் வான்வெளியில் அத்துமீறித் தாக்குதல் நடத்திய இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக அவர் ட்வீட் செய்திருப்பது, அந்தப் பதவிக்கு அழகல்ல. எனவே, அவரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத்  தூதராகக் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, பால்கோட் தாக்குதலுக்குப் பின்னர் `ஜெய்ஹிந்த்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த ட்வீட்டில் #IndianArmedForces என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டிருந்தார்.


[X] Close

[X] Close