``மசூத் அசார் உயிரோடுதான் உள்ளார்..!" -பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் | masood azhar alive says Pakistan media

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (04/03/2019)

கடைசி தொடர்பு:14:42 (04/03/2019)

``மசூத் அசார் உயிரோடுதான் உள்ளார்..!" -பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்

ஜெய்ஷ்- இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உயிருடன் இருப்பதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்- இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. 

ஜெய்ஷ்- இ முகமது அமைப்பின் தலைவராக உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா கூறியது. அதற்குப் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இந்திய விமானப்படை பாக். எல்லைக்குள் நுழைந்து பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே மசூத் அசார் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகப் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. சிகிச்சையில் இருந்த மசூத் அசார் 2-ம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, `மசூத் அசார் உயிரிழப்பு' என சமூக வலைதளங்களில் வைராகி வரும் நிலையில், பாகிஸ்தான் ஊடகம் இதை மறுத்துள்ளது. அசார் குடும்பத்தைச் சேர்ந்த நபர் இந்தத் தகவலை மறுத்தாக பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், அசார் உயிருடன் இருப்பதாகவும், தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும்' தெரிவித்துள்ளது. 

அசாரின் நிலை பற்றிப் பேசிய பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மத்திய அமைச்சர், பவாத் சவுத்ரி ``இந்த நிமிடம் வரை எதுவும் தெரியவில்லை. ஊடகங்களைப் பார்த்தே தெரிந்துகொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.


[X] Close

[X] Close