மசூத் அசாரின் சகோதரர் உட்பட 44 தீவிரவாதிகள் கைது - பாகிஸ்தான் நடவடிக்கைக்கு என்ன காரணம்? | Pakistan arrests 44 militants in new crackdown on extremist groups

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (06/03/2019)

கடைசி தொடர்பு:09:20 (06/03/2019)

மசூத் அசாரின் சகோதரர் உட்பட 44 தீவிரவாதிகள் கைது - பாகிஸ்தான் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

பயங்கரவாதி மசூத் அசாரின் மகன் மற்றும் தம்பி உள்ளிட்ட 44 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து அதிரடி காட்டியுள்ளது. 

மசூத் அசார்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்- இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் ஜெய்ஷ்- இ முகமது உள்ளிட்ட அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும், தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக் கூடாது என இந்தியா கோரிக்கை விடுத்தது. ஏற்கெனவே மசூத் அசாரை சர்வதேச  தீவிரவாதி என அறிவிக்க இந்தியா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகளும், ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

புல்வாமா தாக்குதலுக்கு தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது சர்வதேச நெருக்கடிகளுக்குப் பணிந்துள்ளது பாகிஸ்தான். பயங்கரவாதி மசூத் அசாரின் மகன் மற்றும் தம்பி உள்ளிட்ட 44 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு நேற்று அதிரடியாகக் கைது செய்துள்ளது. இதைப் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், ``தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுப்பது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 44 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மசூத் அசாரின் மகன் ஹமத் அசார் மற்றும் அவரின் சகோதரர் முஃப்தி அப்துல் ராஃப் ஆகியோரும் அடக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடவடிக்கை

இதை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசாம் சுலைமான் கான், ``பாகிஸ்தானின் தேசிய நலனுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளியில் இருந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விரும்பவில்லை. அதனால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ கொடுத்த அழுத்தத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது. தேசிய செயல் திட்டக் குழுவின் அறிவுரைப்படி முழுக்கமுழுக்க எங்களின் சுய முடிவால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது" எனக் கூறியுள்ளார். கூடவே 70 பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்யப்பட்ட இயக்கங்களாகவும் அறிவித்துள்ளது பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம். இது தீவிரவாதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது பாகிஸ்தான் எடுத்த பெரிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த நடவடிக்கை தொடருமா அல்லது விசாரணை முடிந்ததும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா உள்ளிட்ட எந்த அறிவிப்பையும் பாகிஸ்தான் கூறவில்லை.

யார் இந்த முஃப்தி அப்துல் ராஃப்?

முஃப்தி அப்துல் ராஃப்

மசூத் அசாரின் இளைய சகோதரர் தான் இந்த முஃப்தி அப்துல் ராஃப். இவரின் தலைமையின் கீழ் தான் ஜெய்ஷ்- இ முகமது அமைப்பு தற்போது இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசார் தான் என்றாலும் முஃப்தியின் தலைமையின் கீழ் பயங்கரவாத செயல்திட்டங்கள் சமீபகாலமாகத் தீட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஜெய்ஷ்- இ முகமது அமைப்பு நடத்திய தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட வைத்தவர் முஃப்தி. 1999-ல் நடந்த கந்தகார் விமானக் கடத்தல், 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதல், 2016-ல் நடந்த பதான்கோட் விமானதளம் தாக்குதல், தற்போது நடந்துள்ள புல்வாமா தாக்குதல் என ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய அனைத்து தாக்குதல்களிலும் முஃப்தி அப்துலுக்கு தொடர்பு இருக்கிறது. இவர் மீது இந்திய புலனாய்வு அமைப்பு (NIA) குற்றம் சாட்டி இவரையும் சர்வேதேச தீவிரவாதி என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close