சூட்கேஸில் பெண் டாக்டரின் சடலம்.. போலீஸை திணறவைக்கும் முன்னாள் காதலனின் உயிரிழப்பு | Lady Doctor killed Australia

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (06/03/2019)

கடைசி தொடர்பு:13:05 (06/03/2019)

சூட்கேஸில் பெண் டாக்டரின் சடலம்.. போலீஸை திணறவைக்கும் முன்னாள் காதலனின் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார் ப்ரீத்தி ரெட்டி. இந்திய வம்சாவளியான இவர் சிட்னி நகரின் அருகே வசித்து வந்தார். கடந்த 3 -ம் தேதி முதல் இவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். 

ப்ரீத்தி ரெட்டி

Photo: Facebook/Help find Preethi Reddy

அதைத் தொடர்ந்து போலீஸார், ப்ரீத்தி ரெட்டி தொடர்பான விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில்தான் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சூட்கேஸில் ப்ரீத்தி சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் கொல்லப்படும் முன் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடலில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். 

இது தொடர்பான விசாரணையில், கடந்த 3-ம் தேதி பல் மருத்துவம் தொடர்பான ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ப்ரீத்தி ரெட்டி சென்றிருக்கிறார். அங்கு ஹோட்டலில் முன்னாள் காதலனுடன் தங்கியதாகவும் தெரிய வந்திருக்கிறது. ப்ரீத்தி ரெட்டி இருந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அவர் கடந்த 3-ம் தேதி ஒரு கடையில் உணவு வாங்கக் காத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர் அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. இறுதியாக 3-ம் தேதி அவர் தனது வீட்டுக்குத் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். 

பல் மருத்துவர்

Photo: Facebook/Help find Preethi Reddy

விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது முன்னாள் காதலன் பல் மருத்துவர் ஹர்ஷ் நார்டேவிடம் பேசியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் 4-ம் தேதி நடந்த விபத்தில் அவர் தலையில் ஏற்பட்ட பலமான காயத்தால் பலியானார். ப்ரீத்தி காணாமல் போன விவகாரத்தில் போலீஸாரின் சந்தேகப் பார்வையில் இருந்த ஹர்ஷும் விபத்தில் பலியாக போலீஸார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையில் இறங்கினர். 

இந்த நிலையில்தான் நேற்று ப்ரீத்தி ரெட்டியின் கார் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த மரணங்கள் தொடர்பாக திணறிவரும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


[X] Close

[X] Close