`சிறிய நாடு; பெரிய கனவுகள்!’ 37,000 கி.மீ உயரத்திலிருந்து இஸ்ரேல் விண்கலம் எடுத்த செல்ஃபி #Beresheet | Israel's spacecraft sends selfie 37,600 km from Earth

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (07/03/2019)

`சிறிய நாடு; பெரிய கனவுகள்!’ 37,000 கி.மீ உயரத்திலிருந்து இஸ்ரேல் விண்கலம் எடுத்த செல்ஃபி #Beresheet

நிலவுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் முதல் விண்கலமான ப்ரீஷீட் (Beresheet), பூமியிலிருந்து 37,000 கி.மீ உயரத்திலிருந்து செல்ஃபி ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. 

இஸ்ரேல் விண்கலம் எடுத்த செல்ஃபி

பூமியின் துணைக்கோளான நிலவின் பரப்பை ஆராய மனிதகுலம் தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளும் இதற்காக செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அந்தவகையில், இஸ்ரேல் நிலவு குறித்த ஆய்வுக்காக ப்ரீஷீட் (Beresheet) என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியிருக்கிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட அந்த விண்கலம் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (Israel Aerospace Industries) மற்றும் தனியார் தொண்டு நிறுவனமான ஸ்பேஸ்ஐஎல் (SpaceIL) ஆகியோரின் கூட்டு முயற்சி ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. 

இஸ்ரேல் தரப்பிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் முதல் விண்கலமான ப்ரீஷீட் என்ற பெயருக்கு ஹீப்ரு மொழியில் தொடக்கம் (Genesis) என்று பொருள். 7 வாரங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்கலம், வரும் ஏப்ரல் 11ம் தேதி தரையைத் தொடும் என்று இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. 

இஸ்ரேல் விண்கலம்

நிலவை நோக்கிய பயணத்தின் போது இஸ்ரேல் விண்கலம் பூமி தெரியும்படியான செல்ஃபி ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 37,000 கி.மீ உயரத்திலிருந்து அந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த செல்ஃபியில் இஸ்ரேல் கொடியுடன் `Am Yisrael chai’ மற்றும் `SMALL COUNTRY, BIG DREAMS' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. `Am Yisrael chai’ என்ற ஹீப்ரு மொழிச் சொல்லுக்கு `இஸ்ரேல் வாழும்’ என்று பொருளாகும்.       
 


[X] Close

[X] Close