கொட்டும் மழையில் கியூவில் நின்ற மக்கள்! - கேன்சர் குழந்தையைக் காப்பாற்ற நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | 4,855 people turned donor for a young boy suffering from cancer

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:37 (11/03/2019)

கொட்டும் மழையில் கியூவில் நின்ற மக்கள்! - கேன்சர் குழந்தையைக் காப்பாற்ற நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இங்கிலாந்து, வொர்ஸ்டர் நகரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன், ஆஸ்கர் சேஸல்பை லீ. இவனது பெற்றோர், ஒலிவியா சேஸல்பை மற்றும் ஜமை லீ. இந்தச் சிறுவனுக்கு, சமீபத்தில் உடலில் ஏதோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதைக் கவனித்த பெற்றோர், மிகவும் பயந்தபடியே ஆஸ்கரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவர்கள் பயந்ததுபோலவே மருத்துவ ரிசல்ட் வந்தது.

ஆஸ்கர்

அதில், ஆஸ்கருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகவும், அது மிகவும் அரிய வகையான புற்றுநோய் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவனுக்கு ஏற்ற ஸ்டெம் செல்லைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கவில்லையெனில், ஆஸ்கர் உயிரிழக்க  நேரிடும் எனக் கூறியுள்ளனர். 

இதுபற்றி ஆஸ்கரின் தாய் ஒலிவியா கூறும்போது, ‘ கடந்த டிசம்பர் மாதம்தான் அவனுக்கு கேன்சர் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. அதைக் குணப்படுத்த ஸ்டெம் செல் தேவை என மருத்துவர்கள் கூறினர். நாங்கள் பல இடங்களில் ஸ்டெம் செல் தானம் தருபவர்களைத் தேடி அலைந்தோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை. ஆஸ்கரின் முகத்தில் இருக்கும் சிரிப்பும், அவன் கேன்சரை எதிர்த்துப் போராடிக்கொண்டே தனது உடலில் சிறு தளர்வும் காட்டாதபடியே இருந்தான். அவனின் தன்னம்பிக்கை எங்களுக்கும் வந்தது. எப்படியேனும் அவனுக்கான கொடையாளரைத் தேடவேண்டும் என நினைத்து,  ‘ஆஸ்கருக்கு கை கொடுங்கள்’  ’ஆஸ்கருக்கு கை கொடுங்கள்’ என்று பலரிடமும் உதவி கேட்க ஆரம்பித்தோம். அதன் முடிவில்தான், பலர் ஸ்டெம் செல் பரிசோதனைக்கு வந்தனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில், ஆஸ்கர் படிக்கும் பள்ளியில் ஸ்டெம் செல் பரிசோதனை நடைபெற்றுள்ளது. அந்தச் சோதனையில், கொட்டும் மழையில் நனைந்தபடி சுமார் 4,855  பேர் பங்கேற்றுள்ளனர்.  உலகிலேயே, தானம் அளிப்பதற்காக அதிகம் பேர் கியூவில் நின்றது இதுதான் முதல் முறை எனக் கூறப்படுகிறது. 

இந்த விஷயம் பற்றிக் கூறிய ஆஸ்கரின் ஆசிரியர், “ நான் 20 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் பணியாற்றுகிறேன். ஆனால், இது போன்ற ஒரு நிகழ்வை நான் பார்த்ததே இல்லை. யாருக்காவது கேன்சர் எனக் கேள்விப்பட்டால், நாம் வருத்தப்பட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால் நாங்கள், அதை எதிர்த்துப் போராட வேண்டும் என நினைத்து, இந்த ஆஸ்கரின் பெற்றோருடன் இணைந்து அவனுக்கான ஸ்டெம் செல்லைத் தேடினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஆஸ்கருக்கு உள்ள புற்று நோய் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. இதனால், உடல் சோர்வாக இருக்கும், மூச்சுத் திணறல், காய்ச்சல், மூட்டுவலி ஆகியவை ஏற்படும். தற்போது, தினமும் ஆஸ்கருக்கு 20 முறை புதிய ரத்தம் செலுத்தப்பட்டுவருகிறது. அதே வேளையில் அவனுக்கான ஸ்டெம் செல் கொடையாளியைத் தேடும் பணியும் நடைபெற்றுவருகிறது.  


[X] Close

[X] Close