வெளிநாட்டு வேலை மோகம் - இந்தோனேசியாவில் மீட்கப்பட்ட 8 தமிழர்கள்! | Work Overseas appetite ... Recovered 8 Tamilans in Indonesia!

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (10/03/2019)

கடைசி தொடர்பு:08:50 (10/03/2019)

வெளிநாட்டு வேலை மோகம் - இந்தோனேசியாவில் மீட்கப்பட்ட 8 தமிழர்கள்!

வெளிநாட்டில் வேலை... கை நிறையச் சம்பளம்... இது போன்ற விளம்பரங்களை நம்பி தான் இன்றைக்கு பல்வேறு இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டுத் தவிக்கின்றனர்.

வெளிநாட்டு வேலை மோகம் - இந்தோனேசியாவில் மீட்கப்பட்ட 8 தமிழர்கள்!

வெளிநாட்டில் வேலை... கை நிறையச் சம்பளம்... இது போன்ற விளம்பரங்களை நம்பி தான் இன்றைக்கு பல்வேறு இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டுத் தவிக்கின்றனர். இந்தியாவில், பலருக்கும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் யாரை நம்பி செல்கிறோம் என்பதைத் தான் மறந்துவிடுகிறார்கள். இணையதளம் மூலமாக வரும் பல்வேறு போலியான விளம்பரங்களை நம்பி பலரும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். 

வேலை

சமீபத்தில் 8 தமிழர்களுக்குக் கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களை இந்தோனேசியா வரவழைத்து அவர்களின் பாஸ்போர்ட், ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, பாஸ்போர்ட் இல்லாத அவர்கள் சட்ட விரோதமாக இருப்பதாக போலீஸில் மாட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது. பல்வேறு முயற்சிகளுக்குப்பின், இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் அவர்களை மீட்டெடுத்து தமிழகம் அனுப்பியுள்ளனர்.

அவர்களை ஏமாற்றியவர்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது குறித்தும், இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் சந்திர சேகரன் கூறுகையில், `இந்தோனேசிய அரசு சுற்றுலாவை வளர்ச்சிக்காகவும், வர்த்தக ரீதியான முன்னேற்றத்திற்காகவும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு, ஒவ்வொரு வருடமும் இலவச வருகை குடியுரிமைச் சீட்டு (ON ARRIVAL VISA) வழங்குகிறது. இதைத்தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தோனேசியாவில் உள்ள சில போலி முகவர்கள் (Agents), ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், கனடா போன்ற பல்வேறு நாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கான குடியுரிமைச்சீட்டு இந்தோனேசியாவில் வாங்கித் தருவதாகவும் விளம்பரம் செய்கின்றனர். வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞர்களைக் கவர்வதற்காக, இதற்கு முன்பே வேலை வாங்கித் தந்ததாக சில இளைஞர்களின் புகைப்படங்கள், பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு போலி ஆவணங்களைப் பிரதி எடுத்து முகநூலில் வெளியிடுகின்றனர். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு இளைஞர்களைக் குறி வைத்தே இந்த வலை விரிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் சென்று வேலை செய்யும் மோகத்தால் கவரப்பட்டு பணத்தைக் கொடுத்து ஏமாறுகின்றனர் இளைஞர்கள். கடந்த வருடம் கனடாவில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்தி, பணத்தை வாங்கிக்கொண்டு இந்தோனேசியா வரவழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர் மூன்று இளைஞர்கள். அவர்களை இந்தோனேசியத் தமிழ்ச்சங்கம் மீட்டெடுத்து தமிழகத்திற்குத் திரும்ப அனுப்பி வைத்தது.

அதே போல் இந்த வருடமும் ஜனவரி மாதம் 17-ம் தேதி இரண்டு தமிழ் இளைஞர்களிடம்,  கனடாவில் வேலை வாங்கித் தருவதாகவும்,  அதற்கான பணத்தைச் சூரத்தில் உள்ள கோடாக் மகிந்திரா வங்கியில் (Kotak Mahindra Bank in Surat) உள்ள  கெதான் ம ஷாகப்  (Ketan m shah huf) என்னும் வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் செய்துவிடவும் சொல்லி, செல்போன் மூலமாகப் பேசி ஒவ்வொருவரிடமும் 10 முதல் 12 லட்சம் வரை பணத்தை வாங்கியுள்ளனர் அந்த போலி முகவர்கள். பின்னர், அந்த இளைஞர்களைக் கனடா விசா இந்தோனேசியாவில் வாங்கித்தருவதாகச் சொல்லி, இந்தோனேசியா வரவழைத்து, அவர்களை ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் உள்ள பாஸ்போர்ட மற்றும் ஆவணங்களை வாங்கிக் கொண்டு, விசா வாங்கிக் கொண்டு வருவதாகச் சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களுடைய தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். இதனிடையில் குடியுரிமை அலுவலகத்தில் (IMMIGRATION OFFICE) இருந்து வந்த அதிகாரிகள், இளைஞர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனையிட்டு, அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அந்த தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் நண்பர்கள் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர்.  இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம், இளைஞர்களுக்கு உதவுவதற்காக இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அங்கே ஏற்கனவே அதேபோல் ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஆறு தமிழ் இளைஞர்கள் இருப்பது தெரிய வந்தது. 

தமிழர்கள்

பின் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் இதைப்பற்றி விசாரித்தபோது, இந்தியாவில் உள்ள  போலி முகவர்களே இந்தியர்களை ஏமாற்றுகின்றனர் என்றும், அவர்கள் ரஜிந்தர்  மற்றும் ரன்பீர்  என்ற  பெயர்களில் உலவி வருவதும் தெரிய வந்தது. இந்த பெயர்கள் அவர்களின் உண்மையான பெயர்களா, அல்லது போலி பெயர்களா என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அவர்கள்  இந்தியர்கள் என்றும், அவர்களின் பார்வை வேலை தேடும் தமிழ் இளைஞர்கள் மேல் என்பதும் உறுதியானது. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, வெவ்வேறு தேதிகளில் அந்த ஆறு இளைஞர்களும் நாமக்கல்லில் உள்ள ஒரு முகவரின் (Agent) மூலம், இந்தோனேசியாவிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரிடமும்  10 முதல் 12 இலட்சம் வரையிலான பணம் வாங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. 

பின் அவர்களை ஒரு இடத்தில் தங்க வைத்து, கனடா நாட்டிற்குச் செல்வதற்கான விசா வாங்கி வருவதாகக் கூறி, அவர்களிடம் உள்ள ஆவணங்களை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். பின் அந்த இளைஞர்கள் இந்தோனேசியாவில் உள்ள முகவரை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது, விமான நிலையத்திற்கு வந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்லியுள்ளனர். இளைஞர்கள் விமான நிலையம் வந்தபொழுது, யாரும் வராமல், அந்த போலி முகவரே குடியுரிமை அலுவலக அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து, இளைஞர்களைக் கைது செய்ய வைத்துள்ளனர். அந்த இளைஞர்களின் குடும்பத்தினர், போலி முகவரை தொடர்பு கொண்டபொழுது, ஆவணங்களைத் திருப்பித் தர வேண்டுமானால், மேலும் ஒரு நபருக்கு இரண்டு இலட்சங்கள் தர வேண்டுமென்றும் மிரட்டியுள்ளனர். அந்த போலி முகவர்களுக்கு அனைத்து இடங்களிலும் ஆட்கள் இருப்பார்கள் என்றும், அது ஒரு மிகப்பெரிய ஏமாற்று கும்பலாக இருக்கலாம் என்றும் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் சந்தேகிக்கின்றது.

 சந்திரசேகரன்.இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் இளைஞர்கள் எட்டு பேரையும் விடுவிப்பதற்காக பெரும் முயற்சி எடுத்து, இந்தோனேசியக் குடியுரிமை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், இளைஞர்களின் பெற்றோருக்குத் தகவல் கூறி  அபராத தொகையைக் கட்டி அவர்களை மீட்டோம். இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புதிதாக எமர்ஜென்சி பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்து, இந்தியாவுக்கு அனுப்பி வைத்தோம். இரண்டு நபர்கள் திருச்சிக்கும், ஆறு நபர்கள் சென்னைக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இனி வரும் காலங்களில் இது போன்று யாரும் ஏமாறக்கூடாது என்றும், கனடா போன்ற நாடுகளிற்கு வேலைக்குச் செல்வதற்கு இந்தோனேசியாவில் விசா கொடுப்பதில்லை என்பதையும் உறுதியாக இங்கு இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் பதிவு செய்கின்றது. இந்தப் போலி முகவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியே இந்த மோசடியை நடத்துகின்றனர் என்பதால், தீர விசாரிக்காமல் முகநூலில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம், இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.  இந்தோனேசியாவிற்கு வர வேண்டுமானால், இந்தோனேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு, அனைத்து விதமான சந்தேகத்தையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு வர வேண்டும் என்றும் கூறுகிறார் சந்திரசேகரன்.

(இளைஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், அவர்களின் எதிர்காலம் கருதியும் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்யவில்லை.) 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close