சர்க்கரை உற்பத்தியில் நம்பர் 1 இந்தியா; வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலியா... ஏன்? #VikatanInfographics | Australia and Brazil filed a complaint in WTO for India's sugar subsidies

வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (10/03/2019)

கடைசி தொடர்பு:11:45 (11/03/2019)

சர்க்கரை உற்பத்தியில் நம்பர் 1 இந்தியா; வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலியா... ஏன்? #VikatanInfographics

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பின் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வந்து முதலிடம் பிடித்தது இந்தியா.

சர்க்கரை உற்பத்தியில் நம்பர் 1 இந்தியா; வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலியா... ஏன்? #VikatanInfographics

ன்றளவில் 200-க்கும் அதிகமான நாடுகளில் கரும்பு பயிரிடப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் சர்க்கரை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. அப்படியாயின் அதற்கு முன்பே கரும்பு உற்பத்தி இங்கு இருந்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களும் இங்குள்ளது. கி.மு.510-களில் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் படையெடுத்த டோரிஸ் என்னும் ஈரானிய மன்னன், பஞ்சாபில் விளைத்திருந்த கரும்பைப் பார்த்து வியப்படைந்தான். அதை  உண்டு பார்த்தவன் தேனீ இல்லாமல் தேனின் சுவையா என ஆச்சரியமடைந்தான். இந்த கரும்பு நம் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று ஈரானில் அதை விளையவைத்தான். பின்பு ஈரானிலிருந்து அரேபியர்கள் அங்கிருந்து ஆப்பிரிக்கர்கள் அதன்பின் ஐரோப்பாவிற்கு என்று கரும்பு உலகம் முழுவதும் பரவியது. இங்கிலாந்துகளில் சுமார் 1099-க்கு பிறகுதான் சர்க்கரையின் பயன்பாடு தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பே நாம் சர்க்கரையைப் பயன்படுத்தியுள்ளோம்.

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவிற்கு என்ன இடம்?

கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்குப் பின் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. சர்க்கரை உற்பத்தியில் முதலிடம், கரும்பு உற்பத்தியில் முதலிடம், சர்க்கரை பயன்படுத்துவதில் முதலிடம், சர்க்கரை அதிகம் கையிருப்பு வைத்திருப்பதில் முதலிடம், சர்க்கரை ஏற்றுமதி செய்வதில் மூன்றாவது இடம். என உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கிறது இந்தியா. 

உலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிற்கு என்ன இடம்?

முன்னுக்கு இருந்த பிரேசில் பின்னுக்குப் போனதுக்கு என்ன காரணம்?

உலகளவில் அதிகளவு கரும்பு உற்பத்தி செய்யும், சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்தான். சர்க்கரை உற்பத்தியில் கடந்த வருடம் சற்றே பின்தங்கியது பிரேசில். காரணம், கடந்த ஆண்டு அந்த நாட்டின் பருவநிலை கரும்பு உற்பத்தியைப் பெரிதளவில் பாதித்தது. மேலும் சர்க்கரை உற்பத்தியில் வரும் காலங்களில் பிரேசில் முன்போல் ஆர்வம் காட்டுவது கிடையாது. சர்க்கரைக்குப் பதில் கரும்பிலிருந்து எத்தனால் பிரித்தெடுக்கும் பணியைப் பிரேசில் செய்து வருகிறது. ஏனெனில், உலக சந்தையில் சர்க்கரையின் விலை சரிவடைந்ததையடுத்து, சர்க்கரையில் வரும் இலாபத்தை விட, எத்தனாலில் அதிக லாபம் கிடைப்பதினால் அவர்கள் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக எத்தனால் உற்பத்தியில் 
இறங்கி விட்டார்கள். 

உலகில் அதிகளவு கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளை கீழ் உள்ள படத்தில் காணலாம்

உலகில் அதிகளவு கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளைக் கீழ் உள்ள படத்தில் காணலாம்

இந்தியாவின் மீது ஆஸ்திரேலியா வழக்கு தொடர்ந்ததற்கு என்ன காரணம் ?

சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் நாட்டின்  சர்க்கரை ஏற்றுமதி மிக கடுமையாகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organisation) இந்தியாவின் மேல் ஆஸ்திரேலியா வழக்கு தொடர்ந்ததையடுத்து, கடந்த மாதம் பிரேசிலும் இந்தியாவின் மீது வழக்கு தொடர்ந்தது. அதன் காரணம், இந்தியா தன் கரும்பு விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியம்தான். அந்த நாடுகளில் விதை, நீர், மின்சாரம், உரம், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி என அனைத்தையும் சேர்த்து ஒரு கிலோ சர்க்கரையின் அடக்க விலை 80 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை விதை, நீர், மின்சாரம், உரம், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி என அனைத்திற்குமே நம் அரசு மானியம் தருவதினால் ஒரு கிலோ சர்க்கரையின் அடக்க விலை 50 ரூபாய் கூட வருவது இல்லை. சந்தைக்கு வரும் இந்தியச் சர்க்கரையின் விலை கிலோவிற்கு 90 ரூபாயாக இருந்தால் அந்த நாடுகளின் சர்க்கரை விலை கிலோவிற்கு 115-ற்கும் மேல் உள்ளது. இரண்டு நாட்டுச் சர்க்கரையின் தரமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதினால், வாடிக்கையாளர்கள் இந்தியச் சர்க்கரைகளையே வாங்குவதற்குப் பெரிதும் விரும்புகின்றனர். 

ஆஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் டேவிட் லிட்டில்பிரவுட், "ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில் உற்பத்தி செய்யும் 85 சதவிகித சர்க்கரை, ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. கரும்பு விவசாயத்தில் உள்ள பெருமளவு மக்கள் இந்த வருமானத்தையே பெருமளவில் நம்பியுள்ளனர். இந்திய விவசாயிகள் குறைந்த விலையில் கரும்பு உற்பத்தி செய்வது பிரச்னை இல்லை. ஆனால் அரசு சர்க்கரை ஆலைகளுக்கு, விவசாயிகளுக்கும் மானியம் கொடுத்து செயற்கையாக குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வைப்பதுதான் பிரச்சனை. இதன் காரணமாக எங்கள் நாட்டு விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கும் இந்தியாவிற்கும் நல்ல நட்பு சூழலே நிலவுகிறது. இருப்பினும் எங்கள் விவசாயிகள் பாதிக்கப்படுவதின் காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

இந்தியா இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறது?

இந்தியாவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் 12,000 கோடி அளவிற்கு கடன் கொடுக்க வங்கிகள் முன் வந்துள்ளன. இதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் சர்க்கரை உற்பத்தியைப் பெருக்குவது என்பதுதான். அதுமட்டுமல்லாது ஆலைகளுக்குக் கொடுக்கப்படும் கடன் தொகையில் ஒரு சிறிய பகுதியை மத்திய அரசே திரும்பச் செலுத்தும். இதற்காக மட்டும் கடந்த ஜூன், 2018-ல் மத்திய அரசின் பொருளாதார விவகார அமைச்சரவை குழு 1,332 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் இந்திய அரசு கரும்பிற்கு  மானியம் கொடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள இந்த நேரத்தில் தற்பொழுது மேலும் 2,790 கோடி ரூபாயை மானியத்திற்கு ஒதுக்கியிருக்கிறது நம் மத்திய அரசு. 

இத்தனை கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கினாலும், வருடம் முழுவதும் கரும்பின் விலையை உயர்த்தி கொடுக்கச் சொல்லி விவசாயிகள் வீதிகளில் போராடும் நிகழ்வுகள் நித்தமும் தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் இங்கு, கரும்பு உற்பத்தியிலும், சர்க்கரை உற்பத்தியிலும் சம்பாதிப்பது இடைத்தரகர்களும், தொழிலதிபர்களும்தான். கரும்பை விளைவிக்கும் விவசாயி அல்ல. பாவம்; அவர்கள் நாட்டு விவசாயி பாதிக்கப்படுகிறார்கள் என்று வழக்கு தொடுத்தவர்களுக்கு, இந்திய நாட்டு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close