`விமானத்தை இயக்க சிரமமாக உள்ளது’ - 33 நாட்டு மக்களை பலிகொண்ட எத்தியோப்பியா விமான விபத்து | Pilot experienced difficulties says CEo of Ethiopian Airlines

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (11/03/2019)

கடைசி தொடர்பு:16:55 (11/03/2019)

`விமானத்தை இயக்க சிரமமாக உள்ளது’ - 33 நாட்டு மக்களை பலிகொண்ட எத்தியோப்பியா விமான விபத்து

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட குழுவுடன் போயிங் 737 விமானம் கென்யாவின் நைரோபி நகரை நோக்கி நேற்று காலை புறப்பட்டது.

எத்தியோப்பியா

எத்தியோப்பிய நேரப்படி காலை 8:38 மணிக்குப் புறப்பட்ட இந்த விமானம் அடுத்த 6 வது நிமிடத்தில் அதாவது 8:44 மணிக்குக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அபாபா நகரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள  பிஷோப்டூ என்ற நகரில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 157 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்துள்ளனர். அவர்களில் அதிகமாக கென்யாவைச் சேர்ந்தவர்கள் 32 பேர். எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், கனடாவைச் சேர்ந்த 18 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 7 பேர், எகிப்தைச் சேர்ந்த 6 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர், சீனா, இத்தாலி,அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 8 பேர் ஆகிய அனைவருமே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இருந்தும், விமானம் இயக்கும் போது விமானி சில பிரச்னைகளைச் சந்தித்ததாக எத்தியோப்பியா ஏர்லைன் சி.இ.ஓ டெவோல்டி ஜிப்ரெமரியம் (Tewolde Gebre-Mariam) தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, `விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் புறப்பட்ட பிறகு அதை இயக்குவது மிகவும் சிரமாக இருக்கிறது. அதனால் மீண்டும் அபாபா விமான நிலையத்துக்கே திரும்ப அனுமதி கேட்டுள்ளார். நாங்களும் அனுமதி அளித்தோம். ஆனால், அதற்குள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது’ எனத் தெரிவித்துள்ளார். 

இந்த விபத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த 4 பேரின் உடல்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் எத்தியோப்பியா அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 


[X] Close

[X] Close