`என்னைக் காப்பாற்றிய 2 நிமிடம்!’  -எத்தியோப்பியா விமான விபத்திலிருந்து தப்பித்த ஒரே பயணி! | Man saved from Ethiopia crash 

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (11/03/2019)

கடைசி தொடர்பு:16:15 (11/03/2019)

`என்னைக் காப்பாற்றிய 2 நிமிடம்!’  -எத்தியோப்பியா விமான விபத்திலிருந்து தப்பித்த ஒரே பயணி!

எத்தியோப்பியா விமான விபத்து வார இறுதி விடுமுறை நாளை மிகவும் துயரமானதாக மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ethiopia

எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரிலிருந்து நேற்று காலை 8.38 மணியளவில் போயிங் -737 ரக விமானம் கென்யா தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் விமான விபத்துக்குள்ளானது குறித்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டது. விமானம் எத்தியோப்பிய தலைநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷோஃப்டு (Bishoftu) என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் 149 பயணிகள் 8 விமானப் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவசர உதவிகளுக்காக விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு ஏர்லைன்ஸ் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்ததாக ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவைச் சேர்ந்த 18 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர், கென்யாவைச் சேர்ந்த 32 பேர் என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மரணத்தை தழுவினர்.

எத்தியோப்பியா

இந்த நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய ஒருவர் கடைசி நிமிடத்தில் தாமதமாக வந்ததால் விமானத்தில் பயணம் செய்யவில்லை என தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். ஏதன்ஸைச் சேர்ந்தவர் அண்டோனீஸ் மாவ்ரோபொலோஸ். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரான இவர், நேற்று நைரோபி செல்வதற்காக ஆடிஸ் அபாபா விமான நிலையம் வந்திருக்கிறார். ஆனால் அவர் 2 நிமிடம் தாமதாக வந்ததால் அவர் டிக்கெட் முன்பதிவு செய்த விமானத்தில் அவரால் செல்ல முடியவில்லை.

எத்தியோப்பியா

``அதிகாரிகளிடம் எவ்வளவு கெஞ்சியும் தாமதமாக வந்ததால் என்னை விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. நான் வருவதற்குள் விமானம் டேக் ஆஃப் ஆவதற்கு தயாராகிவிட்டது. எனவே, நான் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஆனால், சிறிது நேரத்தில் நான் தவறவிட்ட விமானம் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வந்தன. நான் அதிர்ந்து போனேன். அதிர்ஷ்டவசமாக இன்று நான் உயிருடன் இருக்கிறேன்’’ என்று அண்டோனீஸ் முகநூலில் தன் விமான டிக்கெட் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close