`கிழிக்கப்பட்ட முகம்; காணாமல் போன உடல் பாகங்கள்!'- நடுங்கவைக்கும் பிலிப்பைன்ஸ் சிறுமி கொலை | 16-year-old girl whose face was skinned found in Philippines

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (13/03/2019)

கடைசி தொடர்பு:17:11 (15/03/2019)

`கிழிக்கப்பட்ட முகம்; காணாமல் போன உடல் பாகங்கள்!'- நடுங்கவைக்கும் பிலிப்பைன்ஸ் சிறுமி கொலை

கடந்த சில வருடங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை, நகை பறிப்பு, கொலை போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவை அனைத்தும், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதையே காட்டுகிறது. இங்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது என நினைத்தால் மற்ற நாடுகளில் இதைவிடக் கொடூரமான சம்பவங்களும் நடந்துகொண்டுதான் உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள லப்பு- லப்பு (Lapu-Lapu) என்ற நகரில் 16 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரின் இறப்பு குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் குலை நடுங்க வைக்கும் அளவுக்கு உள்ளது. 

கடந்த மார்ச் 11-ம் தேதி திங்கள் கிழமை காலை லப்பு - லப்பு நகரில் உள்ள பாரங்கே பங்கல் (Barangay Bangkal) என்ற பகுதியில் உள்ள சாலை வழியாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் செல்லும்போது அருகில் இருந்த காலி நிலத்தில், ஒரு பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இதைப் பார்த்ததும் அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 

16 வயதே ஆன இளம் பெண் ஒருவர் அரை நிர்வாணத்துடன், முகம் கழுத்து ஆகிய பகுதிகள் பாதி சிதைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் காவல்துறையினர். அதன் பிறகு நடந்த விசாரணையில் அந்தப் பெண் பாரங்கே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் லீ சிலாவன் (Christine Lee Silawan) என்பதும் அவர் மரிபாகோ நேஷனல் பள்ளியில் 9-ம் கிரேடு (grade) படிக்கும் மாணவி என்பதும் தெரியவந்துள்ளது. சிலாவன் அதே பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வேலை செய்து வருகிறார். மாலை பள்ளி முடிந்த பிறகு தேவாலயத்தில் வேலை செய்வார். கடந்த ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம் போல தேவாலயத்துக்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகளைக் காணாததால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிலாவனின் தாய். மறுநாள் காலை சிலாவன் உயிரற்ற நிலையில் இருந்ததும் அவரின் தாய் வரவழைக்கப்பட்டு பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு நடந்த விஷயங்கள்தான் உண்மையில் கொடூரத்தின் உச்சம். 

பிலிபைன்ஸ் கொலை

இறந்த சிலாவனின் உடல் வழக்கம்போல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் சிலாவனின் உடல் பாகங்களில் பாதி காணாமல் போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அவரின் நாக்கு, சுவாசக் குழாய், உணவுக் குழாய், தொண்டை, வலது காது ஆகியவற்றைக் காணவில்லை. மேலும், சிலாவனின் முகத்தில் உள்ள தோல் கிழிக்கப்பட்டு எலும்பு வெளியில் தெரியும் அளவுக்கு கொடுமையான முறையில் இருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் செய்வதற்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து பேசிய விசாரணை ஆணையர் டான் காகோஸ்காகோஸ் (Dan Gacosgacos), ` தேவாலயத்துக்குச் சென்ற பெண் மீண்டும் வீட்டுக்குச் செல்லவில்லை. அதன் பிறகுதான் காணாமல் போயுள்ளார். மறுநாள் அவரின் உடல், மக்கள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போனதற்கு முன் கடைசியாக சிலாவனுடன் யார் இருந்தார்கள் என்பதை சிசிடிவி மூலம் விசாரணை நடத்தவுள்ளோம். இன்னும் அவரின் இறப்பில் உள்ள மர்மங்கள் தொடர்பான எந்தத்  தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை’ எனக் கூறினார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், சிலாவனை யாரேனும் கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியிருக்க வேண்டும். இரவில் விலங்குகள் அவரின் உடலைச் சிதைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இதை உறுதிப்படுத்த சிலாவனின் உடல் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன் முடிவில்தான் சிலாவன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் பாகங்கள் சிதைக்கப்படக் காரணம் என்ன போன்ற அனைத்து விஷயங்களும் வெளியாகும். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கடந்த நிலையில் பிலிப்பைன்ஸ் முழுவதும்  ‘சிலாவனுக்கு நீதி வேண்டும்’ என்ற கோஷங்கள் வலுத்து வருகிறது. குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில், இன்று சிலாவனின் இறப்புக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு பிலிப்பைன்ஸ் பண மதிப்புப் படி ஒரு லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close