கண்மூடித்தனமான தாக்குதல்!- பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் பலி | At least seven people were killed in a shooting at a school at Brazil

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (14/03/2019)

கடைசி தொடர்பு:11:37 (14/03/2019)

கண்மூடித்தனமான தாக்குதல்!- பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் பலி

பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ என்ற நகரிலிருந்து 70 கிலோ மீட்டர் கிழக்கில் உள்ளது சுஸானோ என்ற பகுதி. அங்குள்ள பள்ளிக்கு இந்திய நேரப்படி நேற்று காலை 9:30 மணிக்கு நுழைந்த இருவர் தங்களின் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளனர். 

பிரேசில் துப்பாக்கிச் சூடு

காலை வழக்கம்போல் அமைதியான முறையில் பள்ளி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பிற்பகல் உணவு இடைவேளையின்போது அடையாளம் தெரியாத இருவர் தலையை மறைக்கும்படியான டி-சர்ட் அணிந்துகொண்டு பள்ளிக்குள் நுழைந்துள்ளனர். உள்ளே வந்ததும் கேட் அருகில் இருந்த காவலர் அவர்களைத் தடுத்துள்ளார். முதலில் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தற்போது அவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த இருவரும், மாணவர்கள் சாப்பிடும்  அறைக்குள் சென்று அங்குள்ள ஊழியர்கள் இருவரைச் சுட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த மாணவர்களை நோக்கியும் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த மாணவர்கள் அனைவரும் 11 முதல் 18 வயதுடையவர்கள். 

அதன்பின் வெளியில் வந்த அந்த இருவரும் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இதையடுத்து, காவலர்கள் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பதும் அவர்களுக்கு 17 மற்றும் 25 வயது மட்டுமே இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. அந்த இருவரும் துப்பாக்கி மட்டுமல்லாது வில் அம்பு, வெடிபொருள்கள் ஆகியவற்றை தங்களுடன் கொண்டு வந்திருப்பதும் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே பள்ளியில் படித்த மாணவர்கள் எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டும் என்ற காரணம் தெரியாமல் பிரேசில் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களுக்காக அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு அருகில் மலர்கள் வைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். உலகிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு சாதாரணமாக அனைவரும் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close