தாக்குதலுக்கு முன் 30 பேருக்கு அனுப்பப்பட்ட மெயில்! - நியூசிலாந்து தாக்குதலில் வெளிவரும் உண்மை | New Zealand PM Received mail before Shooter's Killed 50 in Mosques

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (17/03/2019)

கடைசி தொடர்பு:13:09 (17/03/2019)

தாக்குதலுக்கு முன் 30 பேருக்கு அனுப்பப்பட்ட மெயில்! - நியூசிலாந்து தாக்குதலில் வெளிவரும் உண்மை

நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. 

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அல் நூர் மசூதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் என்ற தனி நபர் கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டு வீழ்த்தினான். இதை தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் லைவ் செய்திருந்தான். 

மற்றொரு மசூதியில் தாக்குதல் நடத்தியவர் பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை ஐம்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியர்கள் பற்றிய தகவல் அறிய தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் என மூன்று ஆண்கள் ஒரு பெண் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளி நாடுகளில் இருந்து நியூசிலாந்துக்குக் குடியேறியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என வாக்குமூலம் அளித்துள்ளனர். இது பெரெண்டன் டாரண்ட் என்ற தனி நபர் மட்டுமே திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்று கிறிஸ்ட்சர்ச் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா அர்டெர்ன், ‘ கிறிஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளிலும் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலைத் தீவிரவாத தாக்குதல் என்றே கூற வேண்டும். தாக்குதல் நடத்தியவர் லைவ் செய்த வீடியோவை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு நியூசிலாந்திலும், இந்த உலகத்திலும் இடம் இல்லை.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குச் சரியாக ஒன்பது நிமிடங்களுக்கு முன்பாக தாக்குதல் நடத்திய நபர் நான் உள்பட 30 பேருக்கு மெயில் செய்துள்ளார். நான் அதைப் பார்த்த இரண்டாவது நிமிடத்தில் பாதுகாப்பு படையினருக்குத் தகவல் தெரிவித்தேன் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் அவன் மசூதிக்குள் நுழைந்துவிட்டான். அந்த மெயிலில் தாக்குதல் குறித்தும் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்பது குறித்தும் எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.  

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள் மட்டும் இன்று மாலைக்குள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். மொத்தமாக அனைத்து உடல்களும் வரும் புதன் கிழமைக்குள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். நியூசிலாந்தில் துப்பாக்கிகள் வைத்திருப்பதில் உள்ள நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். ’ என அவர் பேசியுள்ளார். 
 


[X] Close

[X] Close