இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி | Greta Thunberg nominated for Nobel Peace Prize

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (18/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (18/03/2019)

இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி

கடந்த 15-ம் தேதி குறைந்தது 82 நாடுகளில் உள்ள 1000 நகரங்களில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இவை அனைத்துக்கும் ஒரே ஒரு பெண் மட்டுமே காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதேயான கிரேட்டா தன்பர்க் என்ற சிறுமிதான் அது. இவர் கடந்த சில வருடங்களாகக் காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தனி ஆளாக நின்று போராடி வருகிறார். உலக வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷயமல்ல. இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரேட்டாவின் கோரிக்கை. 

கிரேட்டா

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஸ்வீடனில் சிறிய பதாகையுடன் தன் போராட்டத்தை முன்னெடுக்கும்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளியைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தினார் கிரேட்டா.  இதையடுத்து, ‘ எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து காலநிலை தொடர்பான அபாயத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

இறுதியில் கடந்த வருடம் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுநேரமாக போராட்டக் களத்தில் குதித்தார் கிரேட்டா. சில நிறுவனங்களும் கிரேட்டாவை அழைத்து தங்கள் நிகழ்ச்சிகளில் பேசவைத்தனர். காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஐ.நாவிலும் தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தார். தற்போது உலகம் முழுவதும் தன் கோரிக்கையுடன் சேர்த்து கிரேட்டாவும் பிரபலமடைந்துவிட்டார். 

சிறு வயதிலேயே இயற்கைக்காகப் போராடும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இவர்கள் தொடங்கிய நோபல் பரிசுக்கான குரல் உலகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் கிரேட்டாவும் ஒருவர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனிநபர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் கிரேட்டாவுக்கு பரிசு கிடைத்தால் மிகவும் சிறு வயதிலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும், நோபல் பரிசுக்காக தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் கிரேட்டா. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் சிறுவர்களின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.