"பாய்ந்து வந்த அம்பு... பாதுகாத்த ஐபோன்!" - ஆஸ்திரேலியாவில் நடந்த த்ரில் சம்பவம் | IPhone saves australian man from an deadly arrow

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (18/03/2019)

கடைசி தொடர்பு:18:45 (18/03/2019)

"பாய்ந்து வந்த அம்பு... பாதுகாத்த ஐபோன்!" - ஆஸ்திரேலியாவில் நடந்த த்ரில் சம்பவம்

 ஆப்பிள், தனது ஸ்மார்ட் வாட்ச்களைப் பற்றி விளம்பரம் செய்யும்போது, 'உயிர் காக்கும் சாதனம்'என அடிக்கடி குறிப்பிடும். அதில் இருக்கும் ஹார்ட்ரேட் சென்சாருக்காக அப்படி அவர்கள் கூறுவர். ஆனால் இப்போது, ஐபோன் ஒன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 43 வயதான ஒருவரின் உயிரை உண்மையிலேயே காப்பாற்றியுள்ளது. தனது வீட்டை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த அவர், காரை விட்டு வெளியே இறங்கியதும், ஒருவர் வில் மற்றும் அம்புடன் தன்னை நோக்கி குறிவைத்து நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே இதைத் தனது ஐபோனில் படமெடுக்க இவர் முற்பட, அம்பை எய்திருக்கிறார் அந்த நபர். 

பாய்ந்த அம்பு, உயிரை காத்த ஐபோன்

ஆனால், இவருக்குப் பதிலாக இவர் கையில் பிடித்திருந்த ஐபோனை அம்பு துளைத்தது. துளைத்த அம்பு  2 இன்ச் வரை வெளிவந்திருந்தது, ஸ்கிரீன்கார்டு கழன்று வந்தது. அந்தத் தாக்கத்தில், போன் கையிலிருந்து பறந்து இவர் தாடையில் அடித்துள்ளது. ஆனால், பெரிய காயம் ஒன்றும் அவருக்கு ஏற்படவில்லை. ஐபோன் மட்டும் குறுக்கே இல்லாமல் இருந்திருந்தால் இவரது உயிரே பறிபோயிருக்கக்கூடும். அம்பு எய்த 39 வயது நபரைக் கைதுசெய்தது அந்தப் பகுதி காவல்துறை. விசாரணையில் இந்த நபருக்கு ஏற்கெனவே இவரைத் தெரியும் என்று தெரியவந்தது. ஆனால், தாக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

அம்பு பாய்ந்த ஐபோன்

ஆப்பிள் சாதனங்கள் இப்படி உயிர் காப்பது இது முதல்முறை இல்லையாம். 2015ல் துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து ஒரு மாணவனை ஐபோன் ஒன்று காப்பாற்றி இருக்கிறது. இதேபோல, 2019-ல் ஒரு துப்பாக்கிச்சூடு தாக்குதலிலிருந்து ஒருவரை மேக்புக் ப்ரோ லேப்டாப் காப்பாற்றியிருக்கிறது. இவற்றைப் போல, ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவமும் உலகமெங்கும் இருக்கும் மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க