உலக வரலாற்றில் 9.7 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் புறா! | belgium pigeon Auctioned for 9.7 crores

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (20/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (20/03/2019)

உலக வரலாற்றில் 9.7 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் புறா!

புறா பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியம் புறா, வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யுரோவுக்கு (இந்திய மதிப்பில் 9.7 கோடி ரூபாய்) ஏலம் விடப்பட்டுள்ளது. பிபா எனும் இணைய தளம், அர்மாண்டோ எனும் புறாவை ஏலம் விட்டதில் இந்தத் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. 

பெல்ஜியம் புறா

 லூயிஸ் ஹாமில்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர். ஐந்துமுறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். அதனால், அதிக தூரம் கடந்த சிறந்த புறாவாகக் கருதப்படும் அர்மாண்டோ புறாவானது, `புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்' என அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு புறா அதிகபட்சமாக 3,76,000 யூரோவிற்கு விற்பனையாகி இருந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. இந்தப் புறாவுக்கு வயது ஐந்து. இப்போது ஓய்வுக்காலத்தில் இருக்கிறது. இதை ஏலம் விட்ட நிறுவனத்திற்கு இது உண்மையான நிகழ்வுதானா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இப்படியொரு விலைக்கு புறா விலை போனது என்பதை அவர்கள் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதிகபட்சமாக 4 முதல் 5 லட்ச யூரோவிற்கு விலைபோகும் என நினைத்திருந்தனர். ஏலத்தில் விட்ட ஒரு மணிநேரத்திலேயே சீனர்கள், 5.32 லட்சம் யூரோவிலிருந்து, 1.25 மில்லியன் யூரோவிற்கு அதிகமாக்கி விட்டனர்.

அர்மாண்டோ எனும் புறா வழக்கமான பந்தயப் புறா கிடையாது. தான் பங்கேற்ற கடைசி மூன்று போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை எந்தப் புறாவும் வென்றது இல்லை. அதனால் புறா ஆர்வலர்களிடையே இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.