ஐ.நா சபையை எட்டியுள்ள முகிலன் விவகாரம்! - தமிழக அரசுக்கு அழுத்தமா? | Nam tamilar party has put front the missing case of Environmental activist mugilan in UN

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (21/03/2019)

கடைசி தொடர்பு:12:20 (21/03/2019)

ஐ.நா சபையை எட்டியுள்ள முகிலன் விவகாரம்! - தமிழக அரசுக்கு அழுத்தமா?

சூழலியல் போராளி முகிலன் காணாமல்போய் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அதைப்பற்றிய புகார் தற்போது ஐக்கியநாடுகள் சபையை எட்டியுள்ளது.

முகிலன்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாதவன் ஐ.நா.சபையில் நேற்று பேசிய குறிப்பில், ``சூழலியல் போராளி முகிலன் சர்வதேசப் பிரச்னையான மணற்கொள்ளை மற்றும் ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது உலக நாடுகள் அனைத்தும் அறிந்த செய்தி. துப்பாக்கிச் சூடு தொடர்பான மிக முக்கிய ஆதாரங்களை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார் முகிலன். வெளியிட்ட 7 மணி நேரத்தில் அவர் காணாமல் போயிருக்கிறார். ஸ்டெர்லைட் குற்றங்கள் தொடர்பான விசாரணைக் குழுவிடம் அவர் ஆதாரங்களைக் கொடுக்காமல் தடுக்க அப்படிச் செய்யப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையில் அரசு அலட்சியம் காட்டுவதாகவே தெரிகிறது. 

ஆகவே ஐக்கிய நாடுகள் சபை முகிலன் காணாமல் போன இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" எனப் பேசியிருக்கிறார். முகிலன் காணாமல் போனது தொடர்பாக ஸ்டெர்லைட் விவகாரம், தனிப்பட்ட பிரச்னை எனப் பல கோணங்களில் பொதுமக்கள் கருத்துக் கூறி வருகிறார்கள். மற்றொருபக்கம் இது தொடர்பான தமிழக அரசு விசாரணை மிகவும் அலட்சியப் போக்கிலேயே நடைபெறுவதாக முகிலன் தரப்பினர் புகார் கூறி வருகிறார்கள். இதற்கிடையே முகிலன் காணாமல் போனது தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை வரும் 8ந் தேதி மீண்டும் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துமா என்கிற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க