`சாய்ஸ் பாகிஸ்தான் கையில்தான் உள்ளது' - தீவிரவாதத் தாக்குதல்குறித்து அமெரிக்கா கடும் எச்சரிக்கை | Another Terror Attack on India Will be Extremely Problematic - america Warning to Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (21/03/2019)

`சாய்ஸ் பாகிஸ்தான் கையில்தான் உள்ளது' - தீவிரவாதத் தாக்குதல்குறித்து அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இந்தியா மீதான தீவிரவாதத் தாக்குதல்குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதல்

கடந்த மாதம் 14-ம் தேதி, புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில்,  44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெயிஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்.  புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் செயல்பட்டுவந்த ஜெயிஷ் இ முகமது அமைப்புமீது இந்திய விமானப் படை சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையால்தான் இந்தத் தாக்குதல் நடந்ததாக இந்தியா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துவருகிறது. இருப்பினும், சர்வதேச நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

டிரம்ப்

இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருக்கும் ஜெயிஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயன்றுவருகிறது. ஆனால், சீனாவின் உதவியால் பாகிஸ்தான் இந்த முயற்சியைத் தடை செய்துவருகிறது. இந்நிலையில், தீவிரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி, ``தீவிரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான மற்றும் நீட்டித்த நடவடிக்கையைப் பாகிஸ்தான் எடுக்க வேண்டும். முக்கியமாக, ஜெயிஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் செயல்படவில்லை என்ற உறுதியைப் பாகிஸ்தான் கொடுக்க வேண்டும். 

அமெரிக்கா அதிபர் டிரம்ப்

பாகிஸ்தான் துணை இல்லாமல் எந்த தீவிரவாதத் தாக்குதலும் நடைபெறவில்லை என்றால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு இது சிக்கலானதாக முடியும். இரு நாடுகளுக்கிடையே மேலும் பதற்றம் அதிகரிக்கும். சமீபத்தில், சில தீவிரவாத குழுக்கள்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. தீவிரவாத குழுக்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் இது ஒரு நிர்வாக ரீதியான நடவடிக்கைதான். இன்னும் சில சீரிய நடவடிக்கைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பழைய காலங்களில் நடந்த சம்பவங்களுக்குப் பதிலடியாக, நிரந்தர நடவடிக்கையாக அது இருக்க வேண்டும். கைதுசெய்யப்பட்டவர்கள் ரிலீஸாகிவருகின்றனர். இன்னும் தீவிரவாதத் தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாகக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இம்ரான் கான்

இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்னொரு முறை இந்தியா மீது தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அது பாகிஸ்தானுக்கு மிகவும் சிக்கலானதாக அமையும். ஒரு பொறுப்புள்ள சர்வதேச நாடக தீவிரவாத குழுக்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பொருளாதார ரீதியாக அந்நாடு இன்னும் தனிமைப்படுத்தப்படும். அதனைத் தடுப்பதற்கான சாய்ஸ் பாகிஸ்தானிடம் தான் உள்ளது" என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க