3 பாஸ்போர்ட்; பிளாஸ்டிக் சர்ஜரி; பசிபிக் தீவு குடியுரிமை: நிரவ் மோடி போட்ட பலே பிளான்!    | From plastic surgery to citizenship of Vanuatu: Fugitive Nirav Modi planned it all 

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (21/03/2019)

கடைசி தொடர்பு:16:49 (21/03/2019)

3 பாஸ்போர்ட்; பிளாஸ்டிக் சர்ஜரி; பசிபிக் தீவு குடியுரிமை: நிரவ் மோடி போட்ட பலே பிளான்!   

ந்தியாவைச் சோ்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியிடம்  சட்டவிரோத பரிவர்த்தனைமூலம்13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச்சென்றார்.

நிரவ் மோடி

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டைப் பிறப்பித்திருந்தது. இதையடுத்து, மோடியைக் கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவியை சிபிஐ நாடியது. அதைத் தொடர்ந்து கடந்த வருடம், இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக `ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சோ்ந்த `தி டெலிகிராஃப்’ நாளிதழ், இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை  சமீபத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவில், லண்டன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியிருந்தார். நிரவ் மோடி இவ்வாறு லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை மத்திய அரசு வேடிக்கைபார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தைத் தீவிரமாகக் கிளப்பின. இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றியது. 

இதையடுத்து, அவரை நாடு கடத்திக் கொண்டுவருவது தொடர்பாக இந்திய  அமலாக்கத் துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்,  மோடியைக் கைதுசெய்ய வாரண்ட் பிறப்பித்தது. 

இதைத் தொடர்ந்து, அவரை லண்டன் போலீஸார் நேற்று கைதுசெய்தனர். லண்டனில் உள்ள மெட்ரோ வங்கியில் கணக்கு தொடங்க வந்தபோது, வங்கி ஊழியர் போலீஸாருக்கு நிரவ் மோடி குறித்து தெரிவித்த தகவலின் பேரில்,  போலீஸார் விரைந்து வந்து அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  

மோடி பிடிபட்டபோது, அவரிடம்  பல நாடுகளின்  பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலானவை காலாவதியாகிவிட்டதாகவும்,  அதே சமயம்  யுஏஇ ( ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), சிங்கப்பூர் மற்று ஹாங்காங் ஆகிய 3 நாடுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மோடியின் இந்திய பாஸ்போர்ட் ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பண பலம் மூலம் இந்த பாஸ்போர்ட்டுகளைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.  

வானுட்டு  தீவு

மேலும், பிடிபடுவதற்கு  முன்  நிரவ் மோடி, தான் கைதாவதைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு, பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் செட்டிலாகத் திட்டமிட்டிருந்ததாகவும், இதற்காக அவர்  வானுட்டு குடியுரிமை கோரி விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.  இந்த வானுட்டு தீவு, ஆஸ்திரேலியாவிலிருந்து 1,750 கி.மீ தொலைவில் உள்ளது.  

இதுமட்டுமல்லாது, சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக, லண்டனில் இதற்கென்றே செயல்படும் பெரிய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை அவர் நாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், கைதுசெய்யப்பட்டதன் மூலம் மோடியின் அத்தனை திட்டங்களும் பலிக்காமல் போய்விட்டன. 

 தற்போது மோடி கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், லண்டன் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை 6 முதல் 9 மாதங்கள் வரை நடைபெறலாம். விசாரணை முடிவடைந்த பின்னர், தீர்ப்பை நீதிபதி 2 மாதங்கள் வரை ஒத்திவைக்கலாம். அதற்கு முன்னதாக, அவரை நாடு கடத்துவது தொடர்பாக முடிவெடுக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு  வழக்கு விசாரணைகுறித்த தகவலை நீதிபதி தெரிவிப்பார் என்று லண்டன் நீதித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம், எப்படி இருப்பினும் விஜய் மல்லையா போன்றில்லாமல், நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் குற்றத்தை நிரூபித்து, அவரை 6 மாத காலத்துக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்துவிடலாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம்

இதனிடையே, நிரவ் மோடி கைதுசெய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி காரணமில்லை என்றும், லண்டன் நிருபரின் சமீபத்திய பேட்டியே காரணம் என்றும் கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தல் நேரத்தில் நிரவ் மோடியின் கைது போன்ற பல நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு நடத்தும். ஆனால், அவை மக்களிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இதை மோடி அரசின் தேர்தல் ஸ்டன்ட் என்றே விமர்சித்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க