`எனக்கு யார் இருக்கிறார்கள்; நாட்டைவிட்டு போகிறேன்!' - நியூஸிலாந்தில் நடந்த இறுதிச்சடங்கில் ஒலித்த அழுகுரல் | Wheelchair-bound teen Zaid Mustafa watches his father and brother buried in new zeland

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (21/03/2019)

கடைசி தொடர்பு:21:09 (21/03/2019)

`எனக்கு யார் இருக்கிறார்கள்; நாட்டைவிட்டு போகிறேன்!' - நியூஸிலாந்தில் நடந்த இறுதிச்சடங்கில் ஒலித்த அழுகுரல்

உலகின் மிக அமைதியான நாடு எனப் பெயர் பெற்ற நியூஸிலாந்தில், கடந்த வெள்ளிக்கிழமை சொல்லில் அடங்காத்  துயரம் நேர்ந்தது. நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில், அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், 15 நிமிடத்தில் அந்த நாட்டின் அமைதியைக் குலைத்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட். இந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியாகினர். பலியானவர்களின் முதல்கட்ட இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சிரிய அகதிகளான காலித் முஸ்தபா மற்றும் அவரது மூத்த மகன் ஹம்சா ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடந்த மசூதியின் அருகே, இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. அப்போது, இதே துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்துவரும், அடக்கம் செய்யப்பட்ட காலித்தின் இன்னொரு மகனுமான ஸையத் முஸ்தபாவின் செயல், அங்கிருந்த பலரையும் கண்கலங்கவைத்தது.

நியூஸிலாந்து இறுதிச்சடங்கு

சிரியாவில் நடந்துவரும் போரின் காரணமாக, காலித் குடும்பம் அகதிகளாக ஜோர்டானில் தஞ்சம் அடைந்தது. 6 வருடம் அங்கிருந்தவர்கள், கடந்த வருடம்தான் நியூஸிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர். தனது இரண்டு மகன்களுடன் மசூதிக்கு வந்துள்ளார். அப்போது நடந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே காலித்தும், ஹம்சாவும் பலியான ஸையத் மற்றும் கை, கால்களில் காயங்களுடன் உயிர் தப்பினார். கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. இருந்தாலும், தந்தை மற்றும் சகோதரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என மன உறுதியுடன் வீல் சேரில் உட்கார்ந்தபடியே கலந்துகொண்டார்.

இறுதிச்சடங்கு 

குண்டடி பலமாகப் பட்டுள்ளதால் கை, கால்களை அசைக்கக் கூடாது என அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை மீறி இறுதிச்சடங்கில் காரியங்கள் செய்யும்போது எழுந்து நிற்க முயன்றுள்ளார் சையத். ``அவர், கை அசைக்கக் கூடாது என நாங்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தோம். ஆனால் அவன் மறுத்துவிட்டான். இந்த 13 வயது இளைஞனின் உணர்ச்சிமிகு செயலைக் கண்டு நாங்களும் கையையும் தூக்கி பிரார்த்தனை செய்தோம்" என இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒருவர் நெகிழ்ந்து கூறியுள்ளார்.  

ஸையத்

தாக்குதல் குறித்து சையத்தின் அம்மா சல்வா நியூஸிலாந்தின் ரேடியோ சேனலுக்கு அளித்த பேட்டியில், ``ஆறு வருடம் ஜோர்டானில் அகதிகளாக வாழ்ந்தனர். ஒருகட்டத்தில் நியூஸிலாந்துக்கு இடம் பெயரலாம் என அவர்கள் முடிவெடுத்தபோது, அதை ஆமோதித்தேன். காரணம், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு நியூஸிலாந்து. நீங்கள் மிகவும் அற்புதமான நாட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்போகிறீர்கள் எனக் கூறி அனுப்பிவைத்தேன். ஆனால், இப்போது அது அனைத்தும் பொய்யாகிவிட்டது" என்று சோகத்துடன் கூறியுள்ளார். 

ஸையத்

``எனக்கு இனி இந்த நாட்டில் யாரும் இல்லை. அதனால், இனி நான் இங்கு இருக்கப்போவதில்லை. நியூஸிலாந்தை விட்டு வெளியேறுகிறேன்" என கனத்த இதயத்துடன் இறுதிச் சடங்குக்கு பின் ஸையத் கண்ணீர் மல்கக் கூறும் அதே வேளை, இறுதிச்சடங்கின் போது அவர் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகின்றன. ஸையத் நாட்டை விட்டு செல்லக் கூடாது என அவரை வலியுறுத்திப் பலரும் பதிவிட்டுவருகின்றனர். சிரியப் போரால் அகதிகளாக நியூஸிலாந்தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடூரச் சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, ஹம்சா தனது தாயாருடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோதுதான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் உயிர் போனது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க