10 நகரங்கள், 30 விடுதிகள், 42 அறைகள்!- ரகசிய கேமராக்களால் பதறிய 1,600 ஆண்கள், பெண்கள் | Hundreds of motel guests were secretly filmed

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (22/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (22/03/2019)

10 நகரங்கள், 30 விடுதிகள், 42 அறைகள்!- ரகசிய கேமராக்களால் பதறிய 1,600 ஆண்கள், பெண்கள்

ஸ்பை கேமரா

ஸ்பை - கேமரா விவகாரம் தென்கொரியா மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனியார் விடுதிகள், உடைமாற்றும் அறைகளில் சிறிய அளவிலான ஸ்பை கேமராக்களைப் பொருத்தி பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து அவற்றை இணையதளங்களில் பதிவேற்றுவதாக பல்வேறு புகார்கள் கொரியாவில் வருடா வருடம் குவிந்து வருகிறது. இதற்கென தனிப் பிரிவை ஏற்படுத்திய தென் கொரியா அரசாங்கம் பெண் அதிகாரிகளை நியமித்து பொது இடங்கள், உணவகங்கள், விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளச் செய்தது. இருப்பினும் இந்தக் குற்றச் செயல் குறைந்ததாகத் தெரியவில்லை.

கேமராக்கள்

கடந்த 2012-ம் ஆண்டு 1,353 வழக்குகள் பதிவான நிலையில், 2017-ம் ஆண்டில் 6,470 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு ஏராளமான பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ``என் வாழ்க்கை உங்கள் ஆபாசத்துக்காக இல்லை” என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணியாக சென்றனர். இதில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறப்பட்டது. கலைக் கல்லூரி மாணவர் ஒருவரின் நிர்வாணப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதுதொடர்பாக கடந்தாண்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்துதான் அந்தப் போராட்டம் வீரியமானது. பிபிசி-யின் தரவுப்படி சுமார் 10,000 சமூக ஆர்வலர்கள் போராட்டக்களத்தில் குதித்தனர். `எங்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஆபாசமாகப் பார்க்கும் நீங்கள், ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னை என்றால் அதை ஆதாரமாகக் கொண்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள்' என்று போராட்டத்தில் ஈடுபட்டவர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஸ்பை- கேமரா விவகாரம் தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. தென்கொரியாவில் உள்ள விடுதிகளில் தங்கிய 1,600 பேரை ரகசியமாகப் படம்பிடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஒரு இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அந்தக் குறிப்பிட்ட இணையதளம் தங்களது வாடிக்கையாளர்களிடம் கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு இந்த வீடியோக்களை வழங்கியுள்ளது. மேலும், லைவ்-ஸ்ட்ரீமிங் செய்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மாதக் கட்டண அடிப்படையில் அந்த இணையதளம் வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது.

படங்கள்இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இணையதளத்தில் வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸார் அளித்துள்ள முதற்கட்ட அறிக்கையில்,  ஹேர் டிரையர், சுவிட்சுகள் என அறைகளில் உள்ள பல்வேறு மின்சாதனப் பொருள்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளனர். சிறிய அளவிலான விடுதிகளில்தான் இந்த வீடியோக்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுள்ளன. 10 நகரங்களில் உள்ள 30 விடுதிகளில்,42 அறைகளில் ரகசிய கேமராக்களை வைத்துள்ளனர். இந்தக் கும்பல் இதுவரை 800-க்கும் அதிகமான வீடியோக்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தென்கொரியா செல்லும் சுற்றுலாப் பயணிகளையும், அந்நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.