டெஸ்லா மாடல் 3 காரை ஹேக் செய்த இரண்டு பேருக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்! | Hackers crack infotainment system of Tesla Model 3 car

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:21:15 (25/03/2019)

டெஸ்லா மாடல் 3 காரை ஹேக் செய்த இரண்டு பேருக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!

மாடல் 3 டெஸ்லா

அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரை இரண்டு பேர் ஹேக் செய்திருக்கிறார்கள். வான்கூவர் நகரில் Pwn2own என்ற நிகழ்ச்சி 2007-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல தலைசிறந்த ஹேக்கர்கள் கலந்துகொண்டு அவர்களது திறமையைக் காட்டுவது வழக்கம். இதில் வைக்கப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றால் பரிசுத் தொகையும் வழங்கப்படும். இந்த வருடம் Pwn2own நிகழ்ச்சி கடந்த சில நாள்களுக்குப் முன்னால் நடைபெற்றது. இதில் அமத் காமா (Amat Cama) மற்றும் ரிச்சர்ட் ஹூ (Richard Zhu) இரண்டு ஹேக்கர்களைக் கொண்ட Fluoroacetate என்ற குழு முதலிடம் பிடித்திருக்கிறது. போட்டியின் இறுதி நாளன்று  நடந்த போட்டியில் டெஸ்லா மாடல் 3 காரின் பொழுதுபோக்கு அமைப்பில் உள்ளே நுழைந்து அதை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.

tesla

பிரவுசரில் இருந்த ஒரு பிழையின் மூலமாக இதை அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் டெஸ்லாவின் மாடல் 3 காரும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. `இந்தப் பிரச்னை கூடிய விரைவில் அப்டேட் மூலமாகச் சரி செய்யப்படும் என்றும், டெஸ்லா காரை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற உதவியதற்காக இவர்களுக்கு நன்றி' என்றும் டெஸ்லா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Fluoroacetate குழுவினர் இந்த நிகழ்வில் $375,000 அமெரிக்க டாலர்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்கள், இது இந்திய மதிப்பில் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம்.