`அருணாசலப்பிரதேசம் எங்களுக்கே சொந்தம்!’ - 30,000 மேப்புகளை அழித்த சீனா | China destroys 30,000 ‘incorrect’ world maps for not showing Arunachal in its territory

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (26/03/2019)

கடைசி தொடர்பு:19:35 (26/03/2019)

`அருணாசலப்பிரதேசம் எங்களுக்கே சொந்தம்!’ - 30,000 மேப்புகளை அழித்த சீனா

அருணாசலப் பிரதேசம் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளை சீனாவின் ஒரு பகுதிகளாகக் குறிப்பிடாமல் பிரின்ட் செய்யப்பட்டிருந்த 30,000 உலக வரைபடங்களைக் கைப்பற்றி சீன அதிகாரிகள் அழித்திருக்கிறார்கள். 

சீனா

இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசம், தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத் பகுதியைச் சேர்ந்தது என சீனா தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. இரு நாடுகள் இடையிலான எல்.ஏ.சி எனப்படும் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 3,488 கி.மீ நீள எல்லை தொடர்பாக 21 சுற்றுகளாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. ஆனால், தீர்வுதான் எட்டப்படவில்லை. அருணாசலப்பிரதேச மாநிலத்துக்கு இந்தியத் தலைவர் செல்வதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதேபோல், தைவான் பகுதியும் தங்களுக்கே சொந்தம் என சீனா கூறி வருகிறது.

இந்த நிலையில், அருணாசலப்பிரதேசம் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளை சீனாவின் பகுதியாகக் குறிப்பிடாத உலக வரைபடங்களை சீனாவின் சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 30,000 உலக வரைபடங்களை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

சீனா


இதுகுறித்து பேசிய சீனாவின் வெளிநாட்டு உறவுகளுக்காகப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்கள் துறையைச் சேர்ந்த பேராசிரியர் லியூ வென்சாங்க், `தவறான தகவல்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த உலக வரைபடங்களை சீன அரசு கைப்பற்றி அழித்ததில் எந்த விதிமீறலும் இல்லை. சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கும் வகையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தெற்கு திபெத் மற்றும் தைவான் ஆகியவை சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளே’’ என்று தெரிவித்தார்.