“டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறைக்கு என்னாச்சு?” - ஆச்சர்யத்தில் காலநிலை ஆய்வாளர்கள் | The Greenland Glacier That Caused The Titanic To Sink Is Growing Instead Of Melting

வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:56 (27/03/2019)

“டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறைக்கு என்னாச்சு?” - ஆச்சர்யத்தில் காலநிலை ஆய்வாளர்கள்

புவி வெப்பமாதல் காரணமாக, பூமியின் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளும் பனிப்படலங்களும் தொடர்ந்து உருகி வருவதைப் பலரும் கூறிவருகின்றனர். அப்படி இருக்கையில், இந்த நிகழ்வு சற்று வித்தியாசமானதாக உள்ளது. கீரின்லாந்தின் பனிப்பாறை வளர்ந்துவருகிறது.

கீரின்லாந்து பனிப்பாறை

மிக வேகமாக உருகிக்கொண்டிருந்த கீரின்லாந்தின் பனிப்பாறைகள், எதிர்பாராதவிதமாக வேகம் குறைந்து உருகிவருகிறது. உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் கவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது இந்த பனிப்பாறைகள்தான். ஜகோப்சவன் பனிப்பாறை என இவை அழைக்கப்படுகின்றன. கீரின்லாந்தின்  மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஜகோப்சவன் பனிப்பாறை (Jakobshavn Glacier), கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக உருகிவருகிறது. ஆனால் தற்போது, திடீரென அதன் உருகும் வேகம் குறைந்து, மெதுமெதுவாக பனிக்கட்டியாக மாறிவருகிறது. இந்த மாற்றம், காலநிலை ஆய்வாளர்கள், கடலியல் ஆய்வாளர்கள் எனப் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏனென்றால், புவி வெப்பமாதல் காரணமாகப் பூமியின் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளும் பனிப்படலங்களும் தொடர்ந்து உருகி வருவதாகக் கூறிவந்த நிலையில், இந்த நிகழ்வு சற்று வித்தியாசமானதாக உள்ளது. 1980-களில் இருந்து ஜகோப்சவன் பனிப்பாறையின் அருகில் உள்ள கடல்நீர் வெப்பமாகவே காணப்பட்டுவந்தது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து அந்த கடல்நீர்ப் பகுதி குளிர்ச்சியாகக் காணப்பட்டுவருகிறது.

தொடர்ந்து ஆராய்ச்சிசெய்துவரும் நாசாவின் சிறிய விஞ்ஞானிகள் குழு, வடக்கு அட்லாண்டிக் கடலிலும் ஆர்ட்டிக் கடலிலும் ஏற்படும் கடல் நீரோட்டங்களே குளிர்ச்சி நிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும், இந்தப் பனிப்பாறை வளர்ந்து வருவதால், காலநிலை மாற்றத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது எனவும் எச்சரிக்கின்றனர். இந்த மாற்றம் தற்காலிமான ஒன்றுதான். ஏனென்றால், புவி வெப்பமாதலும் மற்ற காலநிலை மாற்ற விளைவுகளும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கீரின்லாந்தில் இந்த பனிப்பாறையைத் தவிர பெரும்பாலான பனிப்பாறைகளும் பனிப்படலங்களும் தொடர்ந்து வேகமாக உருகி வருகின்றன. கடந்த ஆண்டில், பூமியின் துருவப்பகுதிகளில் அதிகமான உருகும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடல்மட்ட உயர்வும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் இதுகுறித்த ஆய்வுகள் நடந்துவருகின்றன.