சந்திரயான் -2 விண்கலம் மூலமாக லேசர் கருவியை நிலவுக்கு அனுப்பும் நாசா | Nasa send laser Instruments to moon via Chandrayaan 2

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (27/03/2019)

கடைசி தொடர்பு:17:50 (27/03/2019)

சந்திரயான் -2 விண்கலம் மூலமாக லேசர் கருவியை நிலவுக்கு அனுப்பும் நாசா

சந்திரயான் 2  மாதிரி

நிலவை ஆராய்வதற்காக இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ 2008-ம் ஆண்டில் சந்திரயான் என்ற விண்கலத்தை அனுப்பியது.  நிலவில் தண்ணீர் இருப்பதை இந்த விண்கலம் கண்டறிந்தது பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. அதற்கடுத்தபடியாக நிலவில் விண்கலத்தைத் தரையிறங்க வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தை அடுத்த மாதம் விண்ணில் ஏவத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்த விண்கலத்தில் தங்களது கருவியும் கொண்டு செல்லப்படவுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸில் கடந்த வாரம் நடந்த அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாசாவைச் சேர்ந்த அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

 நாசா

அதன்படி நாசாவின் ரெட்ரோரிஃபிளெக்டர் கருவியைச் சந்திரயான்-2 நிலவுக்குக் கொண்டு செல்லும். ``நிலவின் மேற்பரப்பில் இந்த  ரெட்ரோரிஃபிளெக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்கிறோம். அதற்காக அங்கே அதைக் கொண்டு செல்வதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறோம் என நாசாவைச் சேர்ந்த லோரி கிளேஸ் (Lori Glaze) தெரிவித்திருக்கிறார். சந்திரயான்-2 விண்கலத்தில் மட்டுமின்றி இஸ்ரேல் அனுப்பிய விண்கலம் ஒன்றிலும் இதே கருவியை நாசா நிலவுக்கு அனுப்பி வைத்துள்ளது. பூமியிலிருந்து அனுப்பப்படும் லேசர் கற்றையை நிலவில் இருக்கும் இந்தக் கருவியானது எதிரொளிக்கும். இது விண்கலத்தின் இருப்பிடத்தை மட்டுமின்றி பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிட இந்த கருவி உதவும்.