இந்தியாவின் 'மிஷன் சக்தி' - அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எதிர்வினை என்ன? | Countries reaction for Mission Shakti test

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (28/03/2019)

இந்தியாவின் 'மிஷன் சக்தி' - அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எதிர்வினை என்ன?

மிஷன் சக்தி

'மிஷன் சக்தி' வெற்றிபெற்றதால், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளைத் தாக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இணைந்திருக்கிறது இந்தியா.  இந்தச் சாதனை, உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கமாகத் திருப்பியிருக்கிறது. மிஷன் சக்தியின் வெற்றியைப் பற்றி இந்த தொழில்நுட்பத்தை ஏற்கெனவே கையில் வைத்திருக்கும் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. " நாங்கள் இது தொடர்பாக வெளியாகும் தகவல்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாடும், விண்வெளியில் அமைதியையும் சமாதானத்தையும் கடைபிடிக்கும் என நம்புகிறோம்" என சீன வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்கா சற்று கடினமாகவே இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளது.

 பேட்ரிக் ஷானகன்

" நாம் விண்வெளியில்தான் வாழ்கிறோம். எனவே, அதை குப்பைகளால் நிரப்புவது சரியானதாக இருக்காது. விண்வெளி என்பது நமது அவசியமான பணிகளைப் பார்க்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்காக, அங்கே ஒவ்வொருவருக்கும் இயல்பாக இயங்குவதற்கான சுதந்திரம் இருப்பது அவசியம். இதுவே, நான் சொல்லவரும் செய்தியாக இருக்கும் " என அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் பேட்ரிக் ஷானகன் (Patrick Shanahan) தெரிவித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளது. செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் தற்போது வரை பாகிஸ்தானிடம் இல்லை. " விண்வெளி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமான  ஓர் இடம். அதை ராணுவமயமாக்கும் செயல்களைத் தவிர்க்கும் பொறுப்பு என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது "என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.