ஆண்டுகள் கடந்தும் கதிர்வீச்சைக் கடத்தும் புகுஷிமா அணு உலை விபத்து! | Fukushima contaminants found as far north as Alaska's Bering Strait

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (28/03/2019)

கடைசி தொடர்பு:21:50 (28/03/2019)

ஆண்டுகள் கடந்தும் கதிர்வீச்சைக் கடத்தும் புகுஷிமா அணு உலை விபத்து!

கடந்த வருடம் செயின்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகில் கடல்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு கதிர்வீச்சு சோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் புகுஷிமா அணு உலை விபத்துடன் தொடர்புடைய சீசியம்-137 இன் கதிர்வீச்சின் அளவு அதிகமாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர் அலஸ்கா ஃபேர்பேங்ஸ் பல்கலைக்கழக (University of Alaska Fairbanks) ஆய்வாளர்கள்.

புகுஷிமா அணு உலை விபத்து

புகுஷிமா அணு உலை விபத்தினால் வெளியேறிய கதிர்வீச்சு எட்டு ஆண்டுகளைக் கடந்தும் காற்றிலும் கடலிலும் கலந்து உலகின் பல்வேறு மூலைகளுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது கனடா நாட்டின் அலஸ்காவை ஒட்டிய பெரிங் சலசந்தி (Bering Strait) கடற்பகுதியில் புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது. அணுமின் நிலையத்தின் அணு உலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு வெளியானது. அதை இன்றளவும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் விஞ்ஞானிகள். 

கடந்த வருடம் செயின்ட் லாரன்ஸ் (St. Lawrence Island) தீவுக்கு அருகில் கடல்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு கதிர்வீச்சு சோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் புகுஷிமா அணு உலை விபத்துடன் தொடர்புடைய சீசியம்-137 இன் கதிர்வீச்சின் அளவு அதிகமாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர் அலஸ்கா ஃபேர்பேங்ஸ் பல்கலைக்கழக (University of Alaska Fairbanks) ஆய்வாளர்கள். இவை வடக்கு நோக்கி நகர்கின்றன. சீசியம்-137 இன் அளவானது இயற்கையாகக் கடலில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளின் அளவைவிட பத்தில் நான்கு பங்கு அதிகமாகவே உள்ளது. ஆனால், இவற்றால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது. அதேவேளையில் பெரிங் கடற்கரையோர மக்கள் மீன்பிடி தொழிலை நம்பித்தான் வாழ்கின்றனர். அந்தப் பகுதியின் மீன்களில் எவ்வளவு கதிரியக்கம் உள்ளது என்பதையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வானது சிறிய அளவில் நீண்டகாலமாக நடத்தப்பட்ட ஆய்வு. புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு பசிபிக் பெருங்கடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. இதற்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விளையும் திராட்சைகளில் புகுஷிமாவின் கதிர்வீச்சு கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கதிர்வீச்சானது பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. இன்னும் நிறைய இடங்களுக்குக் கதிர்வீச்சு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.