நிரவ் மோடி முன்னெச்சரிக்கையாக செய்த ஒரு விஷயம்! - இந்திய சிறையில் அடைக்க முடியாத சூழல் | How a golden visa can save you from going to jail at home 

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (29/03/2019)

கடைசி தொடர்பு:20:30 (29/03/2019)

நிரவ் மோடி முன்னெச்சரிக்கையாக செய்த ஒரு விஷயம்! - இந்திய சிறையில் அடைக்க முடியாத சூழல்

நிரவ் மோடி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கோல்டன் விசாவை வாங்கியுள்ளார். கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவரது வழக்கறிஞர் இந்த விசா அடிப்படையில்தான் அவர் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு வந்ததாக தெரிவித்தார்.

ஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச்சென்ற பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சிறையில் அடைக்க முடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

நிரவ் மோடி

இந்தியாவைச் சோ்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் சட்டவிரோத பரிவர்த்தனைமூலம் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த நிலையில், நிரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக சுற்றித் திரியும் வீடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இம்மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ தீவிரப்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து அவர், கடந்த 20-ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினம் அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில், நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சிறையில் அடைப்பது அவ்வளவு சாத்தியமானது அல்ல என்றும், இதற்கு அவர் பிரிட்டன் அரசின் `கோல்டன் விசா' மூலம் அந்த நாட்டுக்குள் சென்றதுதான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

நிரவ் மோடியின் இந்திய பாஸ்போர்ட், கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்ட போதிலும், அதற்கு முன்னரே அந்த பாஸ்போர்ட்டின் அடிப்படையில் பிரிட்டன் அரசு அவருக்கு வழங்கியிருப்பது `கோல்டன் விசா'. இந்த விசா யாருக்கு வழங்கப்படும் என்றால், ஐரோப்பிய நாடு குடியுரிமை அல்லாதவர்கள் பிரிட்டன் அரசின் நிதி பத்திரங்களில் குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்டு, அதாவது 18 கோடி ரூபாய் முதலீடு செய்தாலோ அல்லது பிரிட்டன் நிறுவனங்களில் அந்தத் தொகைக்கு ஈடாகத் தொழில் அல்லது வர்த்தகம் செய்தாலோதான் வழங்கப்படும். 

பிரிட்டன் கோல்டன் விசா

இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு பிரிட்டனில் வசிக்கவும், வேலை செய்யவும், கல்வி பயிலவும் மற்றும் பிரிட்டனிலேயே நிரந்தரமாகத் தங்கவும் உரிமை வழங்கப்படுகிறது. 

நிரவ் மோடியும் இந்த முறையில்தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கோல்டன் விசாவை வாங்கியுள்ளார். கடந்த வாரம் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவரது வழக்கறிஞர் இந்த விசா அடிப்படையில்தான் அவர் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு வந்ததாகத் தெரிவித்தார். 

இந்த விசா விதிகளின்படி அவரது இந்திய விசா ரத்து செய்யப்பட்ட போதிலும், அதனால் எந்தப் பாதிப்பும் கோல்டன் விசாவுக்கு ஏற்படாது. இந்த நிலையில், கோல்டன் விசாவைக் காரணமாக வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் பிரிட்டன் விசா விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சில சீர்திருத்தங்கள் இந்த மாதம் 29-ம் தேதி முதல் அமலாகி உள்ளது. இதன்படி, பிரிட்டன் அரசு நிதி பத்திரங்களில் இனி முதலீடு செய்ய முடியாது.

பிரிட்டனில் முதலீடு

அதே சமயம் மற்ற வகையான முதலீடுகளுக்குப் பணம் வந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் அல்லது குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது அந்தத் தொகை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருப்பாக இருந்திருக்க வேண்டும். முன்னர் இந்த விதி 90 நாள்களுக்கு மட்டுமே என இருந்தது. ஆனால், நிரவ் மோடி முன்னரே இந்த விசாவைப் பெற்றுவிட்டதால், தற்போது எதுவும் செய்ய இயலாது. இதனால், நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சிறையில் அடைப்பது அத்தனை சாத்தியமானது இல்லை என பிரிட்டன் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க