இஸ்ரேலின் ரஃபி ஐடன்... உலகையே உலுக்கிய உளவுப்புலி சாதித்தது என்ன? | Rafi Eitan accomplishments and life history

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (31/03/2019)

கடைசி தொடர்பு:13:45 (31/03/2019)

இஸ்ரேலின் ரஃபி ஐடன்... உலகையே உலுக்கிய உளவுப்புலி சாதித்தது என்ன?

அமெரிக்க அதிகாரி ஜோனத்தான் போலார்ட் என்பவரை இஸ்ரேல் உளவாளியாக மாற்றி ராணுவ ரகசியங்களைப் பெற்றார். விஷயம் வெளியில் தெரிந்து, இஸ்ரேல் - அமெரிக்க உறவு சீர்குலைந்ததால், இஸ்ரேல் அரசு ஐடனைப் பலிகடா ஆக்கியது.

இஸ்ரேலின் ரஃபி ஐடன்... உலகையே உலுக்கிய உளவுப்புலி சாதித்தது என்ன?

ர்ஜென்டினாவில் பதுங்கியிருந்த முன்னாள் நாசி படைத்தளபதியை அந்த நாட்டுக்குத் தெரியாமல் கடத்தி வேட்டையாடியவர், இஸ்ரேல் உளவுத்துறையின் தந்தை என்று போற்றப்படும் ரஃபி ஐடன். உலகின் தலைசிறந்த உளவாளிகளில் ஒருவரான இவர், அமெரிக்க ராணுவத்தில் இஸ்ரேல் உளவாளிகளை ஊடுருவ வைத்தவர்.

‘யூதர்களின் பிரச்னைகளுக்கு ஹிட்லரின் இறுதித் தீர்வு’ என்ற ஹிட்லரின் பயங்கரமான இன அழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, 60 லட்சம் யூதர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்த நாசிப்படைத் தளபதி மற்றும் போர்க் குற்றவாளி அடால்ஃப் ஐக்மான் கூட்டுப்படை ராணுவ முகாமிலிருந்து தப்பியதால், நேச நாடுகள் அவரை வேட்டையாடத் துடித்துக்கொண்டிருந்த காலம் அது.

இஸ்ரேல் ரஃபி ஐடன்

ரிகார்டோ க்ளெமென்ட் என்ற பெயரில் அடால்ஃப் ஐக்மான் அர்ஜென்டினாவில் பதுங்கியிருப்பதாக, அவரது மகனின் காதலி மூலம் ஒரு தகவல் கிடைத்தவுடன், உஷாரான இஸ்ரேல், அவரைப் பிடிக்க 12 பேர் கொண்ட ஒரு சிறப்பு உளவுக் குழுவை அர்ஜென்டினாவுக்கு ரகசியமாக அனுப்பியது. அவரைக் கண்டுபிடிப்பதைவிட, அவரை இஸ்ரேல் கொண்டுவருவது கடினமாக இருந்தது. ஏனெனில், அர்ஜென்டினா, ஐக்மானை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்காது என்பதை முன்பே உணர்ந்த இஸ்ரேல், அவரைக் கடத்திக் கொண்டுவர முடிவு செய்தது. ஸ்பெயினுக்கு எதிராக நடந்த புரட்சியின் 150 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது, அதிகளவில் சுற்றுப்பயணிகள் வந்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறப்புப்படை, அர்ஜென்டினா அரசின் கண்ணில் மண்ணைத்தூவி, ஐக்மானை அந்நாட்டு விமானத்திலேயே இஸ்ரேலுக்குக் கடத்திக்கொண்டுவந்து அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது.

கிடைத்த தகவல்களைச் சோதித்துப் பார்க்க, கம்ப்யூட்டர்போல எவ்வித அறிவியல் உபகரணங்களும் இல்லாத காலத்தில் திறமையாகச் செயல்படுத்தப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷன் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தின. பழைய புகைப்படங்கள், ஐக்மானின் அங்கத்தில் உள்ள அடையாளங்கள், தழும்புகள், காதின் அளவு ஆகிய தகவல்களை மட்டுமே வைத்து க்ளெமென்ட்தான் ஐக்மான் என்பதை இஸ்ரேல் படை உறுதி செய்தது. இந்த வெற்றிகரமான ஆபரேஷனுக்குத் தலைமை தாங்கியவர்தான் ரஃபி ஐடன். 

கடந்த 1926-ல் ரஷியாவிலிருந்து இஸ்ரேலில் குடியேறிய ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த ஐடன், தான் வாழும் நகரை அரேபியர்களின் தாக்குதலில் இருந்து காக்க, தன் இளம் பருவத்திலேயே ஹகானா விடுதலைப் படையில் சேர்ந்தார். பின்னர், இஸ்ரேல் ராணுவத்தின், பால்மாக் எனும் சிறப்புப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948-ல் இஸ்ரேல் தனி நாடு கோரி பிரிட்டனுடன் போரில் ஈடுபட்டபோது, ஐடன், கழிவுநீர் கால்வாயில் மூழ்கிச் சென்று மவுன்ட் கார்மல் என்ற இடத்தில் இருந்த பிரிட்டனின் ராடார் தளத்துக்குள் ஊடுருவி, அதை வெடிகுண்டுவைத்து தகர்த்தார். விடுதலைக்கான போரில் இருமுறை படுகாயம் அடைந்தார் ஐடன். தன்னால் இனிமேல் போர்க்களத்தில் நின்று போராட முடியாது என அவர் தெரிவித்தவுடன், இஸ்ரேல் ஓர் உளவுக்குழுவை உருவாக்கி அவரைத் தலைவராக்கியது. எடுத்த எடுப்பிலேயே உளவுத்துறையிலும் அதிரடியாகச் செயல்படத் தொடங்கினார் ஐடன்.

ரஃபி ஐடன்

ஜிப்ரால்டரில் தங்கியிருந்த அயர்லாந்து தரைப்படையின் சிறப்பு வெடிகுண்டு குழுவின் நடவடிக்கைகளைக் கண்காணித்து தகவல்களைச்  சேகரித்தார் ஐடன். அவருடைய தகவல்களை வைத்துதான், பிரிட்டனின் அதிரடிப்படை அயர்லாந்து குழுவை வேட்டையாடி அழித்தது.

அடுத்த பத்தாண்டுகள், ஷின்பெட் எனப்படும் இஸ்ரேல் உளவு அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு, பின்னர் மொசாட் என்ற இஸ்ரேலின் தலைமை உளவு அமைப்பின் ஆபரேஷன் செயல் தலைவராக 1965 வரை செயல்பட்டார். `எம்16’ எனப்படும் பிரிட்டன் உளவு அமைப்புக்கு ரகசிய ஆலோசகராகவும் இருந்துள்ளார் ஐடன்.  

இன்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பு, தனது நேச நாடுகளில் உளவு பார்ப்பதுபோல, 1985-ல் அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்தவர் ஐடன். அமெரிக்க அதிகாரி ஜோனத்தான் போலார்ட் என்பவரை இஸ்ரேல் உளவாளியாக மாற்றி ராணுவ ரகசியங்களைப் பெற்றார். விஷயம் வெளியில் தெரிந்து, இஸ்ரேல் - அமெரிக்க உறவு சீர்குலைந்ததால், இஸ்ரேல் அரசு ஐடனைப் பலிகடா ஆக்கியது.

போலார்ட் சர்ச்சையால், உளவுத்துறைத் தலைவர் பதவியை இழந்தார் ஐடன். ஆனாலும், அவரை ரசாயன தொழிற்சாலைக்கு தலைவராக்கியது, இஸ்ரேல்.

பதவி ஓய்வு பெற்றபின், ஐடன் க்யூபாவில் மிகப்பெரிய அளவில் விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர், ஐடன் தனிக் கட்சி தொடங்கி, 2006-ல் ஓய்வூதிய அமைச்சகத்தின் அமைச்சரானார். எல்லாவற்றுக்கும் மேல், சிற்பங்கள் செதுக்குவதில் அவருக்கு அலாதி பிரியம். தனது சிக்கலான பணிக்கிடையே, 300 சிற்பங்களுக்கு மேல் செதுக்கியுள்ளார் ஐடன். கடந்த வாரம், தனது 93-வது வயதில் இஸ்ரேலில் காலமானார் இந்த உளவுப்புலி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்