`அவனைச் சுமப்பது வலிக்கவில்லை!’ - 6 வருடங்களாக மாற்றுத் திறனாளி நண்பனைத் தூக்கிச் செல்லும் சிறுவன் | Schoolboy has carried his disabled best friend to class every day for SIX years

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (01/04/2019)

கடைசி தொடர்பு:17:52 (01/04/2019)

`அவனைச் சுமப்பது வலிக்கவில்லை!’ - 6 வருடங்களாக மாற்றுத் திறனாளி நண்பனைத் தூக்கிச் செல்லும் சிறுவன்

உண்மையான நண்பன் இருந்தால் எவ்வளவு பெரிய சோதனை இருந்தாலும் கடந்து வந்துவிடலாம் என்று சொல்வார்கள். அதை சீனச் சிறுவன் ஸூ பிங்யாங் உண்மையாக்கியுள்ளார்.

சிறுவன்

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மீஷன் நகரத்தில் ஸூ பிங்யாங் என்னும் 12 வயதுச் சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். அதே பகுதியில் ஸாங் ஸீ என்னும் மாற்றுத் திறனாளி சிறுவனும் வசித்து வருகிறான். இருவரும் சிறிய வயது முதலே நண்பர்கள். இதில் என்ன பிரமாதம் என்கிறீர்களா. மாற்றுத் திறனாளி சிறுவனான ஸாங் ஸீயை கடந்த ஆறு வருடங்களாக ஸீ பிங்யாங் தன் தோளில் சுமந்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறான். பள்ளியில் வகுப்பறை, சாப்பிடும் இடம், கழிவறை என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் மற்றவரின் உதவியில்லாமல் ஸாங் ஸீயால் செல்ல முடியாது. ஆறு வருடங்களாக பிங்யாங் தான் ஸாங் ஸீயை பள்ளி வளாகம் முழுவதும் சுமந்து செல்கிறான். இந்த அற்புதமான நட்பைக் குறித்து சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருவரிடமும் சீன ஊடகங்கள் பேட்டி எடுத்தது. அவர்கள் சொன்ன முதிர்ச்சியான பதில் பின்வருமாறு..

``நான் 40 கிலோ இருக்கிறேன். என் நண்பன் 25 கிலோ இருக்கிறான். அவனைச் தூக்கிக் கொண்டு நடப்பதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். என் நண்பனின் ஊன்று கோளாக இருப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி’’ என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஸூ பிங்யாங்.

சிறுவன்

ஸாங் ஸீ பேசுகையில், ``எனக்கு அரிய வகை தசை நோய் வந்ததால் 4 வயதிலிருந்தே நடக்க முடியாது. இந்தப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்தே என் நண்பன்தான் எனக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கிறான். சாப்பிடுவதற்குச் செல்வது, வகுப்பறைக்குச் செல்வது, கழிவறைக்குச் செல்வது, தண்ணீர் நிரப்பச் செல்வது என எங்குப் போனாலும் என் நண்பன்தான் கூட்டிச் செல்வான். என் கூடவே இருந்து பேசிக் கொண்டே இருப்பான். அவன் இல்லையென்றால் நான் இல்லை’’ என்று நன்றியுணர்வோடு பேசியிருக்கிறார்.

ஸூ பிங்யாங்கின் தாய் அவனின் இந்த உதவும் மனப்பான்மை குறித்து பேசுகையில் பள்ளியில் ஸாங் ஸீவிற்கு இப்படியொரு உதவியைத் தான் செய்து வருவதாக ஒரு நாள் கூட அவன் என்னிடம் சொன்னதே கிடையாது. ஸாங் ஸூவின் பெற்றோர்தான் ஒருமுறை என்னைச் சந்தித்து இதுகுறித்து கூறி நெகிழ்ந்தனர். எனக்கு வியப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது’’ என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஸூ பிங்யாங் போன்ற சிறுவர்கள்தாம் இந்தப் பிரபஞ்சத்தில் உன்னத சக்திகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க