இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் 99 வயது ஆஸ்திரேலியா தோழி மரணம்! | Prince Harry's biggest fan, dies at 99

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:14:00 (02/04/2019)

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் 99 வயது ஆஸ்திரேலியா தோழி மரணம்!

 டாப்னே துனே

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் 99 வயது தோழி டாப்னே துனே சிட்னியில் மரணமடைந்தார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. டாப்னே உடனான உரையாடல்கள் ஹாரிக்கு சிநேகத்தை ஏற்படுத்தியது. ஹாரி தனது ஆஸ்திரேலியா பயணங்களின்போது தவறாமல் டாப்னே துனேவை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார். திருமணத்துக்கும் பின்பு அவர் தன் மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அப்போதும் மனைவியுடன் சென்று அவரைச் சந்தித்தார். மேகனும் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியானது என டாப்னே சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளையடுத்து ஹாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், `` பிறந்த நாளில் குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாப்னே உயிரிழந்துள்ளார். இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.