`இது மிகவும் பயங்கரமானது!'- இந்தியா செயற்கைக்கோளைத் தகர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை விளக்கும் நாசா | Nasa slams India for  ASAT test

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (02/04/2019)

`இது மிகவும் பயங்கரமானது!'- இந்தியா செயற்கைக்கோளைத் தகர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை விளக்கும் நாசா

 செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் விண்ணில் தாக்கி அழிக்கும் நுட்பத்தை, இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததைக் கடந்த வாரம், பிரதமர் மோடி பெருமிதத்துடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அந்த மகிழ்ச்சி, ஒரு வார காலம்கூட நீடிக்க முடியாத தகவலை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

ஏ சாட்

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் பொருட்டு, எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகணை கொண்டு தகர்க்கும் திட்டத்துக்கு, 'மிஷன் சக்தி'  என்று பெயரிடப்பட்டது. கடந்த மாதம் 27-ம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ (DRDO) ஏ-சாட் என்னும் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கித் தகர்த்தது. மிஷன் சக்தி திட்டம் வெற்றியடைந்துள்ளதாக மோடி, மக்களிடையே பெருமையுடன் கூறினார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு, செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை வைத்திருக்கும் நாடு இந்தியாதான் என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நாசா

இந்நிலையில், இந்திய ஏவுகணையால் தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் விண்வெளியின் புவி சுற்றுவட்டப் பாதையில் மிதப்பதாக அமெரிக்கா முன்னர் கூறியது. தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமும் இதனை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நாசா விண்வெளி மைய நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் இன்று டவுன் ஹாலில் நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவரிடம் சக ஊழியர்கள், செயற்கை கோளின் உடைந்த பாகங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) ஆபத்து ஏற்படுத்துமா என்று கேள்வியெழுப்பினர். 

பிரிடன்ஸ்டைன்

அதற்கு பதிலளித்துப் பேசிய  பிரிடன்ஸ்டைன், ''விண்வெளியில் தங்கள் நாட்டு செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக இந்தியா ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை நேரடியாகத் தகர்த்து சோதனை நடத்தியுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. மிக மிக மோசமான செயல். அந்த ஏவுகணை தகர்த்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள், விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இந்த ஒரு நிகழ்வால், 400 பாகங்கள் குப்பைகளாக மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுவரை 60 பாகங்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். மேலும், 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது.  மீதமுள்ள சிறிய பாகங்களை நம்மால் கண்டறிய முடியாது. விண்வெளி நிலையத்தின் மேலே இதுபோன்று குப்பைகள் சேர்வது மிகவும் ஆபத்தான விஷயம். இதுபோன்ற செயல்கள், எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளியில் பயணிக்க முடியாத சூழலை உருவாக்கும்.

'விண்வெளியில் மிதக்கும் குப்பைகள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பெரும் சேதம் விளைவிக்கும்' என்று நாசா தொடர்ந்து கூறிவருகிறது. இந்தியா நடத்திய இந்தச் சோதனையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏற்படும் ஆபத்து 44% அதிகரித்துள்ளது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 2007-ம் ஆண்டு இதேபோன்ற சோதனையை சீனா நிகழ்த்தியது. அப்போது ஏற்பட்ட ஆபத்தான விளைவுகள் இம்முறை ஏற்படவில்லை. விண்வெளி நிலையமும், விண்வெளி வீரர்களும் நலம். சீனா அன்று உருவாக்கிய குப்பைகள் இன்றும் விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற விண்வெளி ஆய்வுகள், மற்ற செயற்கைக்கோள்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும்.  எனவே, ஒவ்வொரு நாடும் விண்வெளியில் உள்ள சூழல் அறிந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும்’’ என்று காட்டமாகப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை