`பனிப்பாறை உடைந்த அந்தத் தருணம்'... அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சுற்றுலாப் பயணிகள் #viralvideo | Tourists escape from iceland Glacier Collapses

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (02/04/2019)

`பனிப்பாறை உடைந்த அந்தத் தருணம்'... அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சுற்றுலாப் பயணிகள் #viralvideo

பனிப்பாறை

குளிர்ப் பிரதேசங்களில் காணப்படும் மிகப் பெரிய அளவு பனிப்பாறைகள் உடைந்து விழுவது என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். இவை கடலிலோ அல்லது ஏரிகளிலோ உடைந்து விழும் போது அதனால் ஏற்படும் அலைகளின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும். அதே போல ஐஸ்லாந்தில் பனிப்பாறை ஒன்று உடைந்து விழும் காட்சியும் அதைத் தொடர்ந்து எழும் மிகப் பெரிய அலையிலிருந்து தப்பிக்க சில சுற்றுலாப் பயணிகள் ஓடும் காட்சியும் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்லாந்தில் இருக்கும் Vatnajokull தேசிய பூங்காவில்தான் இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடந்திருக்கிறது. அங்கே இருக்கும் ஏரிப் பகுதியில் Breidamerkurjokull என்று பெயரிடப்பட்டுள்ள பனிப்பாறை ஒன்று அமைந்திருக்கிறது.

 

 

சமீப காலமாக இந்த ஏரியில் இருக்கும் பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருகின்றன. இதனால் அந்த ஏரியின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்தப் பகுதியில் நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏரியின் அழகை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது திடீரெனப் பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருக்கிறது. நீரில் விழுந்த பனிப்பாறைகளால் மிகப் பெரிய அலை ஒன்று உருவாகியிருக்கிறது. அதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் வேகமாக ஓடுகிறார்கள். இந்த வீடியோ மன்டலர் (Mantler) என்பவரால் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. இதுபோல அந்தப் பகுதியில் அடிக்கடி நடக்கும் என்றாலும் இது சற்று பெரிய அளவிலானது என்றும் அதே சமயம் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.