`கறுப்புப் பட்டியலில் எங்களை சேர்க்க உள்ளனர்; இந்தியாதான் இதற்கு காரணம்!'‍- புலம்பும் பாகிஸ்தான் | Pakistan could be blacklisted by FATF due to 'lobbying by India', says pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (03/04/2019)

கடைசி தொடர்பு:14:52 (03/04/2019)

`கறுப்புப் பட்டியலில் எங்களை சேர்க்க உள்ளனர்; இந்தியாதான் இதற்கு காரணம்!'‍- புலம்பும் பாகிஸ்தான்

சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பின் (Financial Action Task Force) தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம்

சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு என்பது ஜி7 நாடுகளால் உருவாக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் பணமோசடிகளை தடுப்பதற்காகவும், தீவிரவாதம் போன்ற செயல்களுக்குப் பணம் செல்வதைத் தடுப்பதற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. FATF அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்குகிறது.

இதுவரை இரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளைக் கரும்புள்ளி குத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், பயங்கரவாத அமைப்புகளுக்குச் செல்லும் பணத்தைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கூறி பாகிஸ்தானையும் க்ரே (GREY) பட்டியலில் வைத்தது.

அதுமட்டுமின்றி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை ஆதரித்துவருவதாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக உரிய ஆதாரங்களுடன் நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பிடம் புகார் அளித்தது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது.  

``கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியுதவிகளைத் தடுத்து நிறுத்தும் கடமையில் பாகிஸ்தான் மிகவும் சுணக்கம் காட்டி வருகிறது. இதற்காக விதிக்கப்பட்ட இறுதிக்கெடுவான வரும் மே மாதத்துக்குள் இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு விரைந்து செயலாற்றாமல் போனால் அமைப்பின் கறுப்புப் பட்டியலில் அந்நாட்டை வைக்க நேரிடும்’’ என சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒருவேளை கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டால், ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றிலிருந்து எந்த நிதியும் பெற முடியாது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

அண்மையில் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நிதிக் குற்றத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது. நிதி கண்காணிப்புப் பிரிவு 2018-ல் 8,707 சந்தேகத்துக்கிடமான பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி  இதுகுறித்து பேசுகையில், `` சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு  பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்க உள்ளது. இதற்குக் காரணம் இந்தியாதான். இதனால் எங்களுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும். இந்தியா பொய்யான பரப்புரை மேற்கொண்டு இப்படிச் செய்துவிட்டது’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க