இறுதிக் கட்டத்தில் சவுதி அணு ஆய்வுக்கூடம்; வெளியாகும் புகைப்படங்கள்! – பதற்றத்தில் அமெரிக்கா | Saudi Arabia's first nuclear plant project in full form

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (05/04/2019)

இறுதிக் கட்டத்தில் சவுதி அணு ஆய்வுக்கூடம்; வெளியாகும் புகைப்படங்கள்! – பதற்றத்தில் அமெரிக்கா

சவுதி அரசாங்கம், அணுசக்தி  ஆய்வுக்கூடம்  உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்த சோதனை மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சவுதி சல்மான்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த பிப்ரவரி மாதம், முக்கியமான 7 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அணுசக்தி, நீர் உப்பு நீக்கம், மரபியல் மருத்துவம் மற்றும் விமான உதிரிப் பாகங்கள் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். அதிலும், அணு ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் மற்றும் விமான கட்டமைப்புகள் வளர்ச்சி மையம் அமைக்கும் திட்டங்கள் மிக முக்கியத் திட்டங்கள் என்று குறிப்பிட்டார்.

சவுதி அணு உலை

சவுதியில், அணு ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் என்றதும் மற்ற நாடுகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. காரணம், சவுதி இளவரசரின் பேச்சு.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க ஊடகமான சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த பேட்டியில், `சவுதி அணுஆயுதம் தயாரிக்க விரும்பவில்லை. ஆனால், ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் நாங்களும் அணுஆயுதம் தயாரிப்போம்’ என்று பேசினார். அணுஆயுதத் தயாரிப்பில் சவுதி கால்பதிக்கத் தயாராக இருப்பதை முதன்முறையாக அந்த பேட்டியில் தான் சல்மான் ஒப்புக்கொண்டார். அதற்கு, தொடக்கப் புள்ளியாக அணு ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சல்மான் தரப்போ, அணு ஆராய்ச்சிக்கூடம் அமைப்பது ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல, ஆராய்ச்சி செய்வதற்கும், மின்சாரம் தயாரிப்பதற்காகவும்தான் என்று விளக்கம் கொடுத்தார்.

அணு உலை

ரியாத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு ஆய்வுக் கூடத்தின் கட்டுமானப்பணிகள் இறுதிநிலையில் உள்ளதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. சவுதியில் அணு உலை என்றதும், அமெரிக்கா  பதற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அணு ஆய்வுக் கூடத்தின் கட்டுமானப் பணிகளைக் கூர்ந்து கவனித்து, செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறது. எப்பயிருந்தாலும் ஆய்வுக் கூடத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருள்களை உட்செலுத்துவதற்கு முன்னர், சவுதி அரேபியா விரிவான சர்வதேச விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.  மேலும், அமெரிக்காவில் இருந்து அணுசக்தி உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கு ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டும். `அணுசக்தி தொழில்நுட்பத்தை அமைதியான முறையில் பயன்படுத்துவோம்’ என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வளவு விதிமுறைகளையும் மீறி, அணு ஆய்வுக்கூடம் என்று வெளியில் பொய் சொல்லிவிட்டு, ரகசியமாக ஒருவேளை சவுதி அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்தபடியாக அணுசக்தித் திட்டத்தை முன்னெடுக்கும் வளைகுடா தேசமாக சவுதி மாறும். மேலும், ஈரான் உள்ளிட்ட  நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் அமையும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க