வீட்டிலேயே விமானம் தயாரித்த பாப்கார்ன் வியாபாரி! கைதுசெய்த பாகிஸ்தான் அரசு | Pakistani man arrested for testing his small plane

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:18:40 (05/04/2019)

வீட்டிலேயே விமானம் தயாரித்த பாப்கார்ன் வியாபாரி! கைதுசெய்த பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானில், வீட்டிலேயே  விமானம் உருவாக்கிய பாப்கார்ன் வியாபாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமானம் தயாரித்த பாகிஸ்தான்காரர் கைது

பஞ்சாப் மாகாணத்தில், பாக்பட்டன் பகுதியைச் சேர்ந்தவர், பாப்கார்ன் வியாபாரி மொகமது ஃபாயாஸ். பகுதி நேரமாக இவர் வாட்ச்மேன் வேலையும் பார்த்துவந்தார். அபார தொழில்நுட்ப அறிவுகொண்ட மொகமது, தான் சிறுகச் சிறுக சேமித்த தொகையில் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களை வாங்கி, தன் வீட்டிலேயே விமானம் தயாரித்தார். இதற்காக, ஒன்றரை வருடம் உழைத்தார். முடிவில், குட்டி விமானமும் உருவாகிவிட்டது. விமானம் தயாரிக்க வங்கியில் ரூ.50,000 லோனும் வாங்கியிருந்தார்.

ஆனால், விமானம் தயாரிப்பதற்கோ அல்லது பரிசோதனை செய்து பார்க்கவோ  மொகமது எந்த முன் அனுமதியும் பெறவில்லை. அனுமதி பெறாத நிலையில், மொகமது தன் விமானத்தை நேற்று பரிசோதித்துப் பார்த்தார். மொகமது விமானத்தைப் பரிசோதிப்பதைக் காண 500-க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். தகவல் போலீஸுக்குப் பறக்க, இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 92 கிலோ எடை  கொண்ட  குட்டி  விமானத்தையும் போலீஸார்  பறிமுதல்செய்தனர். 

பாகிஸ்தான்காரர் தயாரித்த லிமானம்

மொகமது ஃபயாஸ் கூறுகையில், ''எனது விமானம் 1000 அடி உயரத்தில் பறக்கும். எனது கடினமான உழைப்பில் இதை உருவாக்கியிருக்கிறேன். பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் முறையாக அனுமதிபெற விண்ணப்பித்தேன். என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பரிசோதித்துப்பார்க்கவும் அனுமதி கேட்டேன். என்னை அலட்சியப்படுத்தினர். எனக்கு ஒரு முறை அனுமதிகொடுத்தால், நான் தயாரித்த விமானத்தைப் பறக் வைத்துக் காட்டுவேன்'' என்று பரிதாபத்துடன் தெரிவித்தார். 

பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி நஜீம் அகமது, '' பாகிஸ்தான் வான் பரப்பில் அனுமதிபெறாத எந்த விமானமும் பறக்க அனுமதியில்லை. அனுமதியில்லாமல் விமானம் தயாரித்தது மிகப் பெரிய குற்றம்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க