'செயற்கைக்கோள் சிதைவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - நாசாவின் கருத்தை மறுக்கும் பென்டகன் | Pentagon officials say space debris from mission shakti test will burn up atmosphere

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (05/04/2019)

கடைசி தொடர்பு:19:06 (05/04/2019)

'செயற்கைக்கோள் சிதைவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - நாசாவின் கருத்தை மறுக்கும் பென்டகன்

மிஷன் சக்தி-நாசா

இந்தியா நடத்திய 'மிஷன் சக்தி' சோதனையின்போது, ஏவுகணை செயற்கைக்கோளைத் தாக்கியதில் அது பல துண்டுகளாகச் சிதறியது. அந்தத் துண்டுகள் இன்னும் விண்வெளியில்தான் மிதந்துகொண்டிருக்கின்றன. சுமார் 400-க்கும் மேற்பட்ட துண்டுகள் உருவானதாகவும் அதனால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும்,  நாசாவின் தலைமை நிர்வாகி ஜிம் பிரைடென்ஸ்டெயின் சில நாள்களுக்கு முன்னால் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கருத்தை மறுத்திருக்கிறது அமெரிக்க ராணுவத் தலைமையகமான  பென்டகன். 'இந்தத் துண்டுகள் அனைத்தும் வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்துவிடும் வாய்ப்புகள் உள்ளதால், பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது' என அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் பேட்ரிக் ஷானகன் மார்ச் 28-ம் தேதி தெரிவித்திருந்தார்.

பேட்ரிக் ஷானகன்

ஆனால், அதற்கடுத்த நாள்களிலேயே நாசா, அதற்கு மாறான கருத்தைத் தெரிவித்தது பலருக்கும்  குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பேட்ரிக் ஷானகன் தெரிவித்த கருத்தின்  நிலைப்பாட்டில்தான் பென்டகன் இன்னும் இருக்கிறதா என்று நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 'ஆம்' எனப் பதிலளித்திருக்கிறார் செய்ந்த் தொடர்பாளர் சார்லி சம்மர்ஸ்  (Charlie Summers). நாசாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, இதேபோல ஒரு கருத்தைத்தான் இந்தியா தெரிவித்திருந்தது. விண்வெளியில் உள்ள சிதைவுகள் 45 நாள்களில் மறைந்துவிடும் என DRDO-வைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.